உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
         
     50    தாரணி வேந்தன் றலைத்தா ணிகழ்ந்தது
           காரண மாகக் காத றேறி
           ஓர்ப்புறு நெஞ்சந் தேர்ச்சியிற் றிருத்திப்
           பேர்த்தவன் வினவிய பெருங்களிற் றிலக்கணம்
           போர்த்தொழில் வேந்தன்முன் பொருந்தக் காட்டி
     55    நீல யானை நெஞ்சுபுக் கனன்போற்
           சீல விகற்பந் தெரிந்தன னுரைக்கலும்
           அதுமுன் னடக்கிய மதியறி பாகரொ
           டங்கை விதிர்த்தாங் கரசவை புகழப்
           பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
     60    விழுநிதி யடுத்த கொழுமென் செல்வத்துக்
 
                 (உதயணன் செயல்)
               50 - 58: தாரணி............புகழ
 
(பொழிப்புரை) இனி இக்காதல் நிகழ்ச்சி தானும் பிரச்சோதன மன்னன் முன்னிலையில் நிகழ்ந்தமையாலே, உதயண மன்னன் ஞெரேலென அவ்விடத்தின் தன்மையை நினைந்து தனது அறிவுத் தேர்ச்சியாலே தன் நெஞ்சத்தைச் சீர்திருத்திக் கொண்டு அதனைத் தன் வயப்படுத்தியவனாய் அம்மன்னவன் தன்னை வினவிய பெரிய களிற்றியானையின் இயல்பினை அவன் அறிவுக்குப் பொருந்துமாறு கூறியுணர்த்தி, மேலும் அந்நளகிரி சிதைந்ததற்கியன்ற காரணங் கூறுபவன் அந்த நீலநிற யானையின் நெஞ்சத்தே புகுந்து அதன் இயல்பை எலாம் கண்கூடாகக் கண்டு கூறுபவன் போன்று யானை ஒழுக்கத்தின் வேறுபாடுகளை யெல்லாம் நூல் வாயிலாய் அறிந்து அம்மன்னனுக்குக் கூறாநிற்பவும், அவ்வுரை கேட்ட அவ்வரசனை உள்ளிட்ட அவையோரும், அவ்வியானை நூலிலக்கணமெல்லாம் நன்கு பயின்று தம்மனத்தே அடக்கி மேலும் மதி நுட்பத்தானும் அறிகின்ற யானைப்பாகரும் தத்தம் அழகிய கைகளை அசைத்து வியந்து உதயணனைப் புகழாநிற்ப என்க.
 
(விளக்கம்) தாரணி வேந்தன் - பிரச்சோதனன். தலைத்தாள் - முன்னிலை. காதல் தேறி - காதல் நிலையினின்றும் தெளிவுற்று. ஓர்ப்புறு - நினைவு கூர்கின்ற, தேர்ச்சி என்றது நல்லொழுக்கத்தே பயின்றடிப் பட்ட திறமையை. அவன் - பிரச்சோதனன். சீலம் - யானை ஒழுக்கம். அது - அச்சீல விகற்பம். பயின்றடக்கிய பாகர் மதியறி பாகர் என்று தனித்தனி கூட்டுக. வியப்புடையோர் கையசைத்தல் இயல்பு.