உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
            பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
     60    விழுநிதி யடுத்த கொழுமென் செல்வத்துக்
           கணக்கரை வியனகர்க் கலவறை காக்கும்
           திணைத்தொழி லாளரைப் புகுத்துமி னீங்கெனப்
           புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
           நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்
     65    தானை மடக்கா மான மாந்தர்
           அண்ணாந் தியலா வான்றுபுரி யடக்கத்துக்
           கண்ணி நெற்றியர் கைதொழூஉப் புகுதரக்
           களிறுவழங்கு தடக்கையிற் காண்வரக் கொண்ட
           வெள்ளேட் டங்கண் வித்தக மெழுதிய
     70    கடையெழுத் தோலைக் கணக்குவரி காட்டி
           முன்னுறு கிளவியிற் பண்ணுறப் பணிக்கலும்
 
                 (பிரச்சோதனன் செயல்)
             59 - 71: பைந்தொடி..........பணிக்கலும்
 
(பொழிப்புரை) பின்னர்ப் பிரச்சோதன மன்னன் தன்னுடன் இருந்த பசிய வளையலணிந்த கோப்பெருந்தேவி முதலிய உரிமை மகளிரையும், தன் பரிசனங்களையும் அவ்விடத்தினின்றும் போக்கிப் பின்னர் ஏவலரை நோக்கி, 'சிறந்த செல்வங்கள் குவிக்கப்பட்ட கொழுவிய செல்வத்தையுடைய நங் கருவூலக் கணக்கரையும், அகன்ற அக்கருவூலத்தைக் காக்கும் குலமுடைய தொழிலாளரையும், இங்கே அழைத்து வாருங்கோள்' என்று பணித்தமையாலே சிறிது பொழுதின்கண் புறங்காலளவும் தாழும்படி போர்வையாலே போர்த்துக் கொண்டு, நிலத்திலே தோயும்படி உடுத்த நெடிய நுண்ணிய ஆடையையுடையராக முன்றானையை மடக்குதலில்லாத மானப்பண்புடைய அக் கணக்கரும் திணைத் தொழிலாளரும் அணந்து நடவாமல் அமைந்த நடையையுடையராய் அடக்கமுடையராய் நெற்றியில் கண்ணி சூடியவராய் மன்னவனைக் கைகூப்பித் தொழுவோராய் மன்னன் திருமுன்னர் வந்து புகுதாநிற்ப, அவர் வரவுகண்ட அரசன் போர்க்களிற்றைச் செலுத்துந் தனது பெரிய கையிலே அழகுண்டாகப் பற்றியிருந்ததும் வெள்ளோலையின்கண் வித்தகம் பட எழுதப்பட்டதும் இறுதியில் தனது கையெழுத்திடப்பட்டது மாகிய ஓலையின்கண் வரைந்துள்ள கணக்காகிய வரிகளை அவர்க்குக் காட்டி 'இதன்கண் வரையப்பட்டபடி நீயிர்சென்று செய்யுங்கோள்,' என்று வாய் திறந்து கூறாமல் குறிப்பாலேயே பணியா நிற்றலும் என்க.
 
(விளக்கம்) பைந்தொடிச் சுற்றம் என்றது உரிமை மகளிரை. கரக் கலவரை - இறைப் பொருள்களையும் அணிகலன்களையும் வைக்கும் அறை. கரப் பொருள் - இறைப் பொருள். புறங்கால்.............கண்ணி நெற்றியர் என்னுந்துணையும் அத் தொழிலாளர் இயல்பு கூறியபடியாம். ஆன்று அமைந்து தொழூஉ - தொழுது. காண்-காட்சி; அழகு. வெள்ளேடு - எழுதாத ஏடு. ஏவலரைப் போக்கிய பின்னர் எழுதுவித்துத் தன் கையெழுத்து மிடப்பட்ட ஏடு என்பது கருத்து. பரிசி லாகலின் வாயாற் கூறாமல் குறிப்பாகப் பணித்தான் என்றவாறு. பண்ணுற - செய்ய.