உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
            குஞ்சரச் சேரிக் குமரற் கியற்றிய
           வெண்சுதை நல்லி லுறையு ளாக
     90    இடம்புகு தக்கன் றிருத்த னெடிதெனப்
           பேரியல் வையம் பின்செல வருளி
           வீரிய வேந்தன் விடுத்தகம் புக்கபின்
 
                 (பிரச்சோதனன் செயல்)
                88 - 92: குஞ்சர..........புக்கபின்
 
(பொழிப்புரை) அதுகேட்ட மறமாச்சேனன் உதயணனை நோக்கி "இறைமகனே! இனி நீ நின்பொருட்டுக் குஞ்சரச் சேரியிலே அமைக்கப்பட்டுள்ள வெள்ளிய சுதையையுடைய நல்ல மாளிகையைத் தங்குமிடமாகக் கொண்டு அவ்விடத்தே செல்லுதல் நன்றாகும். இவ்விடத்தே நெடும் பொழுது இருத்தலைத் தவிர்க!" என்று கூறி விடுத்துப் பின்னர்ப் பேரழகுடைய தேர்கள் சிலவற்றையும் அவன்பின் செல்லும்படி பணித்தருளி, அம்மன்னவன் தன் மாளிகைக்கு எழுந்தருளிய பின்னர் என்க.
 
(விளக்கம்) குமரற்கு: முன்னிலைப் புறமொழி. நினக்கு என்றவாறு. இடம் - அவ்விடத்தே. புகுதக்கன்று - புகுதல் தக்கதாம். இருத்தல் தவிர்க என ஒரு சொல் வருவித்தோதுக. இயல் - அழகு. வையம் - தேர் - வண்டியுமாம். மறமாச் சேனன் என்னும் சிறப்புப் பெயர் உண்மை கருதி வீரிய வேந்தன் என்றார்.