உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
            விட்டுழல் யானை யச்ச நீக்கி
           வெறிகோள் பண்ணியுந் தொழிறலைப் பெயர்த்தவன்
     95    கலிகொ ளாவணங் கைதொழப் போகி
           அரைமதி யிரும்பொடு கவைமுட் கரீஇ
           பீலி சுற்றிய வேணு வெண்காழ்
           யானை யிளையரைத் தானத்துப் பிணிக்கெனத்
           தகைமலி வேழந் தலைக்கடை யிழிதந்
     100    தகம்புக் கனனா லரசவை விடுத்தென்.
 
                 (உதயணன் செயல்)
             93 -100: விட்டுழல்.............விடுத்தென்
 
(பொழிப்புரை) பாகர் முதலியோராலே அடக்க வியலா தென்று கைவிடப்பட்டுத் தன் மனம் போன வழியெலாம் சென்று மாந்தரைக் கொலை செய்து, நகரத்திலே உழலாநின்ற நளகிரிக் கூற்றத்தின் கொடிய செயலை அகற்றி அந்நகர மாந்தர்க் கெய்திய அச்சத்தை அகற்றியருளிய அவ்வுதயணகுமரன் அவ்வரசவையை நீங்கி நளகிரியை ஊர்ந்தவனாய் மகிழ்ச்சியாராவாரமிக்க அங்காடித் தெரு வழியாக ஆங்குக் குழுமிய மாந்தரெல்லாம் ஆர்வத்தோடே தம் நன்றியுணர்வு தோன்றக் கைகூப்பித் தொழா நிற்பச்சென்று தம் கையின்கண் அரைத் திங்கள் வடிவமுடைய இரும்பாகிய தோட்டியோடு கவைத்த முள்ளையுடைய தாற்றுக் கோலும் மயிற்பீலி சுற்றப்பட்ட மூங்கிலாகிய வெளிய குத்துக் கோலும் ஆகிய கருவிகளைக் கொண்டுள்ள இளமை யுடைய யானைப் பாகரை நோக்கி "இந்நளகிரியை அதற்குரிய கூடத்தே பிணித்திடுக" என்று பணித்து அழகுமிக்க அந்நள கிரியின் எருத்தத்தினின்றும் இறங்கி அக்குஞ்சரச்சேரி விருந்து மாளிகையின்கண் எழுந்தருளினான் என்க.
 
(விளக்கம்) பாகராற் கைவிடப்பட்டு வெறிகோள் பண்ணி உழலும் யானை என்க. பண்ணியும் என்புழி உம்மை இசைநிறை. பெயர்த்தவன்: உதயணன். பெயர்த்தவன் அரசவை விடுத்துப் போகிப் பிணிக்கெனக் (கூறி) இழிதந்து அகம் புக்கனன் என இயைக்க. வெறிகோள் - வெறிகொண்டு கொலைசெய்தல். கலி - ஆரவாரம். இஃது உதயணனைக் கண்டுழி மாந்தர் மகிழ்ச்சியாலெடுத்த ஆரவாரம். ஆவணம் - அங்காடித்தெரு. கைதொழுதல் - நன்றி யுணர்வினை உணர்த்தல். அரைமதி இரும்பு - தோட்டி, கரீஇ - கருவி. வேணு - மூங்கில். தானம் - கூடம். தகை - அழகு. ஆல், அசை. விடுத்தென் என்புழி னகரவீற்றான் முடிவது காண்க. இவ்வாறே இந்நூலின் ஒவ்வொரு காதையும் னகரவீற்றான் முடிவதும் காண்க. இஃது இயைபு என்னும் வனப்பாகும். இதுபற்றிப் பேராசிரியர், தொல் - செய்யுளியல் 236 ஆம் சூத்திரவுரை விளக்கத்தே 'இயைவு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்கு வேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன; அவை னகர வீற்றான் இற்றன' என்று கூறுதலும் உணர்க.

            32. கரடு பெயர்த்தது முற்றிற்று.