உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
         
     15   தலைக்கூட் டுபாயமொடு தக்கோன் றெரிந்து
          முட்டு முடுக்கு மிட்டிடை கழியும்
          கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும்
          மரத்தினு மண்ணினு மதியோர் புணர்க்கும்
          எந்திர மருங்கி னிழுக்க மின்மை
     20   அந்நிலை மருங்கி னாசற நாடி
          வஞ்ச மின்மை நெஞ்சிற் றேறிச்
 
              (உதயணன் ஆராய்ந்து தெளிதல்)
               15 - 21: தலைக்கூட்டு............தேறி
 
(பொழிப்புரை) தகுதியாலுயர்ந்தோனாகிய உதயணன் அம் மாளிகையின் கண்ணமைந்த முட்டு நெறிகளையும், முடுக்குகளையும் சிறிய இடைகழிகளையும், கரப்பறைகளையுடைய உட்டெருக்களையும் கள்ளப் பூமியையும் ஆராய்ந்து மேலும் ஆங்காங்கு அறிவுடையோரால் மரத்தானும் மண்ணானும் இயற்றப்பட்ட பொறிகளையும் குற்றமற ஆராய்ந்து அவற்றின் நிலைமையிற் பழுதின்மையையும் அவற்றினெல்லாம் வஞ்சமின்மையையும் உணர்ந்து அம்மன்னன் தன்னை நட்பாக்கும் உபாயம் இது வென்று தன்னெஞ்சத்தே தெளிந்தென்க.
 
(விளக்கம்) பிரச்சோதனன் தன்னை வயப்படுத்திச் சேர்த்துக்கொளும் பொருட்டாதல் கொல்லும் பொருட்டாதல் இது செய்யலாம் ஆகலின் இவ்விருவகையினையும் ஆராய்ந்து தெளிந்தான் என்பார் தலைக்கூட்டு உபாயமொடு வஞ்சமின்மை தேறி என்றார். தலைக்கூட்டுபாயம் - பகைவரை நட்டாராக்கும் அரசியற் சூழ்ச்சி. முட்டு - வழிபோற்றோன்றிப் பின்பு முட்டாயிருக்கும் பொய்வழி. இதனை ஊழடி முட்டம் என்பர.் குறிஞ்சிப் பாட்டில் (258) முடுக்கு - மூலை. கரப்பறை - கள்ள அறை. கள்ளப்பூமி - பூமி போற்றோன்றி உள்ளே பொய்யா யிருக்குமிடம். (உதயணன் காணுங் காட்சி)