உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           புலம்புமுத் துகுத்த புன்மைத் தாகி
     45   நிறைகடன் மண்டில நேமி யுருட்டிய
          இறைகெழு பெருவிற லெஞ்சிய பின்றைக்
          கடங்கண் ணரிந்த கைய ராகி
          இடந்தொறும் பல்கிய மன்னர் போல
          வரம்பில் பன்மீன் வயின்வயின் விலங்கிப்
     50   பரந்துமீ தரும்பிய பசலைவா னத்துத்<
 
               (மாலைக்கால வண்ணனை)
               44 - 50: புலம்பு..........வானத்து
 
(பொழிப்புரை) (நிலமகள்) தனிமைத் துயரத்தானே அழுத கண்ணீர்த் துளிகளையுடையதொரு புல்லிய நிலைமையுடையளாக நீர்நிறைந்த கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகத்தை ஆணைச் சக்கரம் உருட்டிய இறைமைத்தன்மை பொருந்திய பேராற்றலுடைய முடிவேந்தன் ஒருவன் பட்டொழிந்த பின்னர்த் தாம் தாம் அப்பெருவிறல் வேந்தனுக்குச் செலுத்த வேண்டிய திறைப் பொருளைச் செலுத்தாமல் தவிர்ந்த சிறுமைச் செயலையுடையராகி ஆங்காங்கே பெருகிய குறுநில வேந்தர்களைப் போன்று எண்ணிறந்த பல்வேறு வகைப்பட்ட விண்மீன்கள் இடந்தொறும் விளங்கிப் பரவி முகிழ்த்த நிறங்குன்றிப் பசலைபாய்ந்த வானத்தின்கண் என்க.
 
(விளக்கம்) உலகம் புன்மைத்தாக என்க. ஆகி - ஆக. கடன் மண்டிலம் - உலகம். நேமி - ஆணைச் சக்கரம். இறை - இறைமைத் தன்மை. பெருவிறல்: அன்மொழித் தொகை; முடிவேந்தன் என்க. எஞ்சிய - இறந்த, கடம் - கடமைப்பொருள்; திறை. கண்ணரிதல் - தவிர்தல். கையர் - சிறுமையுடையோர். வயின் - இடம். விலங்கி - விளங்கி. பசலை - ஈண்டு நிறம் மங்குதன் மேற்று. இனி இவ்வினிய உவமையோடு,

"உரைசெய் திகிரிதனை யுருட்டி யொருகோலோச்சி யுலகாண்ட அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்"

எனவரும் கம்பர் திருவாக்கு (மிதிலைக்காட்சி - 73) நினைக.