உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           தலைத்தேர்த் தானைக்குத் தலைவனாகி
          முலைப்பாற் காலத்து முடிமுறை யெய்திக்
          குடைவீற் றிருந்த குழவி போலப்
          பொழில்கண் விளக்குந் தொழினுகம் பூண்டு
     55   புயன்மாசு கழீஇப் புனிற்றுநா ளுலவாது
          வியன்கண் மாநிலந் தாங்கவிசும் பூர்ந்து
          பைந்தொடி மகளிர் பரவினர் கைதொழச்
          செங்கோட் டிளம்பிறை செக்கர்த் தோன்றித்
          தூய்மை காட்டும் வாய்மைமுற் றாது
     60   மதர்வை யோர்கதிர் மாடத்துப் பரத்தரச்
 
                 (பிறைத் திங்களின் தோற்றம்)
                  51 - 60: தலைத்தேர்..........பரத்தர
 
(பொழிப்புரை) தாய் முலைப்பாலுண்ணும் இளம்பருவத்திலேயே தாய் முறைமையாலே திருமுடி சூட்டப் பெற்றுத்தலையாய தேர்ப் படைக்குத் தலைவனுமாகி வெண்கொற்றக் குடையின் கீழிருந்து உலகுபுரக்கும் ஓர் அரசிளங்குழவி போன்று செவ்விய கோடுகளையுடைய இளம்பிறை நிலவுலகத்தை விளக்கமுறச் செய்து புரக்கும் பொறையை மேற்கொண்டு தன்னை மறைக்கின்ற முகிலாகிய மாசு நீக்கிப் பிறந்த அணிமைக் காலத்திலேயே அகன்ற இடத்தையுடைய பெரிய இந்நிலவுலகம் உலந் தொழியாமே குளிர்வித்துப் புரத்தற்கு வானத்தே ஊர்ந்து பசிய தொடியை அணிந்த மகளிர் வாழ்த்திக் கைகூப்பித் தொழா நிற்ப மேற்றிசையில் செக்கர்வானத்தே தோன்றித் தனது தூய நிலவொளியைப் பரப்பும் தன் தன்மையின்கண் முதிராது மயங்குதற்கேதுவான இளவொளியினை மாடத்து நிலாமுற்றத்தே மெல்லெனப் பரப்புதலைச் செய்ய என்க.
 
(விளக்கம்) நால்வகைப் படையினும் தேர்ப்படை முதன்மை பெறுதலின்
தலைத்தேர்த்தானை எனப்பட்டது. முலைப்பாற் காலம் - முலையுண்ணும் குழவிப்பருவம். முறை - தாயமுறை.

"கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர்பிணி யகத்திருந்து ........................
....................................................
உருகெழு தாயம் ஊழின் எய்தி"

(பட்டினப் 221 - 227)

என்றார் பிறரும்,

இனி, ''முலைப்பாற்காலத்து முடிமுரை யெய்திக் குடைவீற்றிருத்த குழவி போல"
என்னும் இதனோடு,

"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்டளிர்
நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகை சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு
அழினியும் இன்றயின்றனனே" (புறநா - 77)

எனவரும் பாடல் நினையற்பாலது.

புயலாகிய மாசென்க. மாநிலம் உலவாது தாங்க என மாற்றுக. புணிற்றுநாள் - பிறந்து அணிமைக்காலம். கன்னி மகளிர் பிறை தொழுதல் மரபு. செக்கர் - செவ்வானம், தூய்மை - தூய நிலாவொளி. மதர்வை - மயக்கம். ஓர்: அசை.