உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
         
     95   வெந்துயர்க் கண்ணின் வேலிட் டதுபோல்
          வந்திறுத் தன்றால் வலியெனக் கில்லெனக்
          கையறு குருசிலை வைகிய தெழுவென
          இலங்குசுடர் விளக்கோ டெதிர்வந் தேத்திப்
          புறங்காப் பிளையர் புரிந்தகம் படுப்ப
     100   எண்ணா லிலக்கணத் துண்ணூல் வாங்கித்
          திணைவிதி யாள ரிணையற வகுத்த
          தமனியக் கூடத்துத் தலையள வியன்ற
          மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்துச்
          சித்திர வம்பலஞ் சேர்ந்துகுடக் கோங்கிய
     105   அத்தம் பேரிய வணிநிலை மாடத்து
          மடையமைத் தியற்றிய மணிக்கா லமளிப்
          படையகத் தோங்கிய பல்பூஞ் சேக்கைப்
          பைத னெஞ்சத்து மையல் கொள்ளா
          எஃகொழி களிற்றின் வெய்துயிர்த் துயங்கி
 
                  (உதயணன் நிலைமை)
              95 - 109: வெந்துயர்..........உயங்கி
 
(பொழிப்புரை) "பண்டே புண்பட்டு வெவ்விய துன்பத்தைத் தருகின்ற கண்ணின்கண் வேற்படையைச் செருகினாற்போன்று முன்னரே பெருந்துயர் உழக்கும் என்னை மேலும் துயருறுத்தற்கு இம்மாலைக் காலமும் வந்து தங்குவதாயிற்றே இத்துயரத்தைக் கடந்துய்தற்கு ஊற்றாந் துணையோ ஒன்றேனும் பெற்றிலேனே என்செய்கோ? என்று கையறவு கொள்ளாநின்ற உதயணனைப் புறத்தே நின்று காக்கும் இளமறவர் விளங்காநின்ற சுடர் விளக்கோடு எதிரே வந்து கைகூப்பித் தொழுது, பெருமானே! பொழுது போயிற்று மாளிகையினுள்ளே எழுந்தருளுக என்று விரும்பி அகத்தே அழைத்துக் கொடுபோக அம்மாளிகையினகத்தே ஒருசார் சிறந்த மனைக்குரிய முப்பத்திரண்டு நல்லிலக்கணங்களும் அமையும்படி இல்லம் அமைக்குந் தொழிலோர் நுண்ணிய நூல் பிடித்து ஒப்பிலாதபடி இயற்றிய பொன் கூடத்தே முதல் இடை கடை என்னும் முவ்வகை அளவினில் வைத்து முதல் அளவுடையதும் மயன் என்னும் அசுரத்தச்சன் படைத்தது போன்றதும் மணியாலியன்ற தூண்களையுடையது மாகிய படுக்கையறையின்கண், சித்திர வம்பலத்தோடு கூடி மேற்றிசைக்கண் உயர்ந்துள்ள அத்தகிரியின் பெயரைத் தன் பெயராகவுடைய அழகிய நிலையையுடைய மாடத்தின்கண்ணே மூட்டுவாய் தோன்றாதபடி இயற்றிய மாணிக்கக் கால்களையுடைய கட்டிலின்மேல் ஐவகை மெத்தைகளையும் அடுக்காக விரித்தமையானே உயர்ந்துள்ள பலவாகிய மலர்ப்படுக்கையின்கட் சேர்ந்து, அவ் வுதயணகுமரன் துன்பம் நிரம்பிய தனது நெஞ்சத்தே மயக்கங்கொண்டு வேல்பாய்ந்து ஊடுருவப்பட்ட களிற்றியானை போன்று வெய்தாக மூச்செறிந்து வருந்தியென்க.
 
(விளக்கம்) நல்லில்லம் சிறந்த மானிட வடிவிற்றாக அமைதல் வேண்டு மென்பவாகலின் மானிடனுக்குரிய முப்பத்திரண்டிலக்கணமும் அதற்கும் உளவாயின. திணை - வீடு. தமனியக்கூடம் - பொன்னாலியன்ற கூடம். மயன் - அசுரத்தச்சன். மல்லம் - பள்ளியறை. சித்திர வம்பலம் - ஓவியம் எழுதப்பட்ட அறை. இதனை எழுதெழிலம்பலம் என்ப. மடை - மூட்டுவாய்; மூட்டுவாய் தோன்றாதபடி. அமைத்து என்க. படை - ஐந்து வகையாகப் படுத்த மெத்தை. எஃகு - வேல். ஒழிகளிறு: வினைத்தொகை. ஊடுருவியொழிந்த என்க.