உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
33. மாலைப் புலம்பல் |
|
திலமலர்ச் செல்வா யெயிறுவிளக்
குறுக்க அலமரு
திருமுகத் தளகத் தப்பிய 120 செம்பொற்
சுண்ணஞ் சிதர்ந்த
திருநுதல் பண்பிற்
காட்டிப் பருகுவனள்
போலச்
சிதர்மலர்த் தாமரைச் செந்தோடு
கடுப்ப மதரரி
நெடுங்கண் வேற்கடை
கான்ற புள்ளி
வெம்பனி கரந்த கள்விதன் 125 காரிகை
யுண்டவென் பேரிசை
யாண்மை செறுநர்
முன்னர்ச் சிறுமை
யின்றிப் பெறுவென்
கொல்லென மறுவந்து
மயங்கி எவ்வமிக்
கவனும் புலம்ப
|
|
(இதுவுமது) 118 -
128: இலமலர்............புலம்ப
|
|
(பொழிப்புரை) இலவ மலர் போன்று
சிவந்த வாயையும் அவ்வாயின்கண் நிரல்பட்ட பற்கள் தான்சிறிதே நகுதலாலே
வெளிப்பட்டுத் தன் கருத்தினை எனக்கு விளக்கஞ் செய்யா நிற்பவும் அழகிய
முகத்தையும் கூந்தலின்கண் அப்பிய செம்பொன்னாலியன்ற சுண்ணம் சிதறிய
அழகிய நுதலையும் தன் பண்புடைமை தோன்ற யான் நோக்குங்கால் எனக்குக்
காட்டி யானோக்காக் காலைச் சுழலா நின்ற தேன்சிந்திய செந்தாமரை
மலரின் சிவந்த இதழை யொத்த மதர்த்த செவ்வரியோடிய தன் நெடிய
கண்களாலே என்னை வாரிப் பருகுவாள் போன்று நோக்கிக் கண்ணாகிய
அவ்வேலின் கடைப்பகுதி உகுத்த வெவ்விய கண்ணீரைப் பிறர் அறியாவண்ணம்
மறைத்துக்கொண்ட என் உள்ளங்கவர்ந்த அக்கள்வியின் பேரழகாலே
உண்ணப்பட்ட என்னுடைய பெரிய புகழுக்கெல்லாம காரணமான எனது பழைய ஆண்மைத்
தன்மையை யான் என் பகைவர் முன்பு இளிவர வெய்தாமைப் பொருட்டு மீண்டும்
பெறுவேனோ? பெறமாட்டேனோ? என்று மனஞ்சுழன்று மயங்கித் துன்பமிகுந்த
அவ்வுதயணகுமரனும் வருந்தா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) இல - இலவமரம்.
எயிறு அவள் கருத்தை எனக்கு விளக்கா நிற்பவும் என்க. அலமரு நெடுங்கண் என
இயைத்துக் கொள்க.எயிறு விளக்குறுக்க என்றது தான் குறிப்பறிந்தமையைக்
கூறியவாறு என்னை? "குறிக்கொண்டு நோக்காமையல்லால் ஒருகண் சிறக்
கணித்தாள் போல நகும்" என்பவாகலின் அங்ஙனம் மெல்ல நகுதலின் எயிறுகள்
சிறிதே தோன்றி அவள் கருத்தை எனக்குணர்த்தவும் என்றபடியாம் என்க.மாதர்
மென்முலை முதலாக நுதலீறாகப் பண்பிற் காட்டி என்றது அவள் புகுமுகம் புரிதல்
என்னும் மெய்ப்பாடெய்தி நின்றதனை யுணர்த்தியபடியாம். புகுமுகம் புரிதல்
என்பது ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி தன்னை அவன் நோக்குதற்கண்
விரும்பும் உள்ள நிகழ்ச்சியாம். புகுதலாவது - தலைமகன் நோக்குழி
அவன் தன்னை நன்கு நோக்குமாற்றான் இயைந்து நிற்றல் என்க. பருகுவனள்
போல நோக்கி என ஒருசொற் பெய்க. வேற்கடை கான்ற பனி கரந்த கள்வி
என்றது, அவள் சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பா டெய்தினமை
கூறியபடியாம்.நெடுங்கண் நீர் காலுதற்கு ஏது இந்நம்பியை யானை முன்விடுத்த
தன் தந்தையின் கொடுமை என்பதனைப் பின்னரும் காண்க. (135.)
தன்னெஞ்சம் கவர்தலின் கள்வி என்றான். காரிகை - பேரழகு இசைக்குக்
காரணமான ஆண்மை என்க. சிறுமை - இளிவரல். மறு வந்து - சுழன்று. எவ்வம் -
துன்பம். அவனும்-உதயணனும். உம்மை எதிரது தழீஇயது.
|