உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           கிளையினும் பிரித்தவன் கேடுதலை யெய்தித்
          தளையினும் பட்டவன் றனிய னென்னான்
          வேழம் விலக்கிய யாழொடுஞ் செல்கெனச்
     140   சொன்னோ னாணை முன்னர்த் தோன்றி
          உரக்களி றடக்குவ தோர்த்து நின்ற
          மரத்தி னியன்றகொன் மன்னவன் கண்ணெனப
 
        (உதயணன் நிலைக்கு வாசவதத்தை இரங்குதல்)
         137 - 143 - கிளையினும் ....... ... கண்ணென
 
(பொழிப்புரை) அந்தோ! ஊழ்வினையாலே இவ்வுதயண மன்னன் கெடுநிலை யெய்தித் தன் சுற்றத்தாரினின்றும் பிரிக்கப் பட்டவன், மேலும் மாற்றாராற் சிறைக் கோட்டத்தே புகுத்தவும் பட்டனன்; வேறொரு துணையுமின்றித் தமியனும் ஆயினன். இத்தகைய நிலையினையுடையன் இவன் என்று எண்ணி இரங்குதல் செய்யானாய் என் தந்தை ''நின் யாழோடு சென்று வெறி கொண்ட களிற்றியானையை அடக்குக'' என்று ஏவினனாக; அவன் இங்ஙனம் ஏவாமுன்பே அவன் ஆற்றல் மிக்க அக்களிற்றின்முன் அஞ்சாமற் சென்று அதனை அடக்கா நின்ற செயலையும் ஆராய்ந்து நின்றன என் தந்தையின் கண்கள். கண்ணோடாத அக்கண்கள் மரத்தாலியற்றப் பட்ட கண்களேயோ! என்று, பசிய மாலையணிந்த தன் தந்தையை நோகின்ற நோயையுடையளாய் என்க.
 
(விளக்கம்) பிரித்தவன் - பிரிக்கப்பட்டவன். தளை - சிறை. என்னாள் - என்றிரங்காதவனாய். விலக்கிய - விலக்க. சொன்னோன் - சொன்னான். உரம் - வலி. ஓர்த்து நின்றன ஆதலால் அவை மரத்தினாற் செய்யப்பட்ட கண்களோ என்க. கண்ணோட்ட மின்மையின் மரக்கண் என்றாள். "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்" எனவும் (முத்தொள்ளாயிரம்). கண்ணிணையு மரமாந் தீவினையி னேற்கே" எனவும் (திருவாச. திருச்சதகம்) பிறசான்றோரும் ஓதுதல் காண்க.