உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           செம்பொன் வள்ளத்துத் தீம்பா லூட்டும்
          எம்மனை வாரா ளென்செய் தனளெனப்
     170   பைங்கிளி காணாது பயிர்ந்துநிற் கூஉம்
          அஞ்சொற் பேதா யருளென் போரும்
          மதியங் கெடுத்து மாவிசும் புழிதரும்
          தெறுதரு நாகநின் றிருமுகங் காணிற்
          செறுதலு முண்டினி யெழுகென் போரும்
     175   பிசியு நொடியும் பிறவும் பயிற்றி
          நகைவல் லாய நண்ணினர் மருட்டி
 
                   (இதுவுமது)
              168 - 176: செம்பொன்.......... மருட்டி
 
(பொழிப்புரை) வேறு சிலர், 'அழகிய மொழிகளை மிழற்றுகின்ற பேதையே! ந்ீ வளர்க்கும் பச்சைக்கிளி நின்னைக் காணாமை யானே ''அந்தோ! எனக்குச் செம்பொற் கிண்ணத்தே இனிய ஆன்பாலைக் கொணர்ந்து ஊட்டும் என் அன்னை இன்னும் வந்திலளே! என்னை மறந்து அவள் வேறு என்னதான் செய்கின்றனளோ? அறிகிலேனே!' என்று அலமந்து நின்னை அழைத்தழைத்துக் கூவுகின்றதுகாண்! அவ்வேழைக் கிளிக்கு அருள்வாயாக' என்போரும், வேறுசிலர், 'அன்னாய்! திங்கள் மண்டிலத்தை விழுங்கி மறைத்துக் கரிய வானத்தே தங்குகின்ற அழிவு தருகின்ற நச்சுப் பாம்பு முண்டன்றோ! அதுதானும் உனது அழகிய முகமண்டிலத்தை ஒரோவழிக் காணுமாயின் சினந்து ஊறுசெய்தல் ஒருதலைகாண்! ஆதலின் இப்பொழுது ஈண்டு நில்லாதொழிக! அகத்தே எழுந்தருள்க!' என்போரும் ஆகிப் பிசியும் நொடியும் இன்னோரன்ன பிறவும் கூறி ஆங்கு அவளை அணுகிய நகைமொழி பேசி நகுவித்தலில் வல்லவராகிய அத்தோழியர் அவளை மருட்டாநிற்ப என்க.
 
(விளக்கம்) செம்பொன்..................செய்தனள். இது கிளியின் கூற்றைக்கொண்டு கூறியவாறாம். பயிர்ந்து - அழைத்து. மதியம் - ஈண்டு முழுத்திங்கள்.தெறுதருதல் - அழிவு செய்தல். செறல் - சினத்தல். பிசி - விடுகதை. நொடி - படைத்து மொழிகதை. மருட்டி - மருட்ட.