உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           இருவர் நெஞ்சமு மிடைவிட லின்றித்
     200  திரிதர லோயாது திகிரியிற் சுழல
          ஊழ்வினை வலிப்பி னல்ல தியாவதும்
          சூழ்வினை யறுத்த சொல்லருங் கடுநோய்க்
          காமக் கனலெரி கொளீஇ யாமம்
          தீர்வது போலா தாகித் திசைதிரிந்
     205  தீர்வது போல விருளொடு நிற்பச்
          சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி
          நீந்தி யன்ன நினைப்பின ராகி
          முழங்குகடற் பட்டோ ருழந்துபின் கண்ட
          கரையெனக் காலை தோன்றலின் முகையின
     210   பூக்கண் மலரப் புலம்பிய பொய்கைப்
          பாற்கே ழன்னமொடு பல்புள் ளொலிப்பப்
          பரந்துகண் புதைஇய பாயிரு ணீங்கிப்
          புலர்ந்தது மாதோ பொழிறலைப் பெயர்ந்தென்.
 
                   (பொழுதுவிடிதல்)
               199 - 213: இருவர்............பெயர்ந்தென்
 
(பொழிப்புரை) இங்ஙனம் உதயணனும் வாசவதத்தையும் ஆகிய இருவர் நெஞ்சமும் இடையறவின்றித் தத்தம் நிலை யினின்றும் பிறழ்தலொழியாமல் சக்கரம் போன்று சுழலா நிற்ப, அற்றையிரவு ஊழ்வினையாலே அகற்றப்பட்டாலன்றித் தாம் தாம் ஆராய்ந்து செய்யும் வினைகளைப் பயனில்லாதனவாய்ச் செய்யவல்லதாகிய சொல்லுதற்கரிய கொடிய நோயாகிய காமம் என்கின்ற கனலுகின்ற தீயினை மூட்டிவிட்டுப் பின்னும் தம்மை விட்டு அகலாதது போன்று ஆகித் தான் செல்லுந் திசைமாறித் தம்மை உயிருடன் அரிந்துண்பதுபோல உலகின்கண் நின்று நிலை பெறாநிற்றலாலே தாம் தாம் ஏறிக் கிடக்கின்ற படுக்கைகள் மட்டுமே அப்பெருந் துயர்க் கடலை நீந்துதற்குரிய தெப்பங்களாக இடையறாது அதனை நீந்துவோர் போலும் எண்ணமுடையராக அவர்க்கு ஆரவாரிக்கின்ற பெரிய கடலின்கண் வீழ்ந்து விட்டவர் பெரிதும் முயன்று நீந்தி நீந்திப் பின்னர்க் கண்ட அதன் கரை போன்று அவ்விரவின் விடியற்காலம் ஒருவாறு தோன்றிற்றாக, விடியற்காலத் தோன்றுதலாலே இரவு முழுதும் ஆரவார மேது மின்றித் தனிமையுற்றுக் கிடந்த நீர்நிலைகளில் கூம்பிய மலர்கள் மலராநிற்பவும், பால்போலும் நிறமுடைய அன்னப் பறவைகளுட் படப் பல்வேறு பறவைகளும் கண்விழித்து ஆரவாரஞ் செய்ய யாண்டும் பரவி உலகெலாம் மறைத்துள்ள பரவும் இயல்புடைய இருள் ஒருவாறு இப்பேருலகத்தை விட்டு நீங்கிப் புலர்ந்தொழிந்தது, என்க.
 
(விளக்கம்) இருவர் - உதயணனும் வாசவதத்தையும். ஊழ்வினையால் நீக்கப்படுதலின்றிச் சூழ்வினையைப் பயனிலாதனவாய்ச் செய்யும் நோய் என்க. கனலெரி: வினைத்தொகை. திசை - தான் செல்லுந்திசை. அஃதாவது மேலைத்திசை. நினைப்பினராக என்க. அவர்க்குக் காலை தோன்றலின் என்க. பின் அரிதிற்கண்ட கரைபோல என்க. முகையின - கூம்பினவாகிய. பாயிருள் - வாளா அடை மாத்திரை. பொழில் - உலகம்: ஆகு பெயர்.

         33. மாலைப் புலம்பல் முற்றிற்று