உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           பெயர்வரி வாசனை கேட்டபி னுயர்திறல்
          ஊழி னல்லது தப்புத லறியார்
    10     காலனுங் கடியு நூலொண் காட்சியர்
          யாக்கை மருங்கிற் காப்புக் கடம்பூண்
          டருந்துறை போகிய பெருந்தகை யாளர்
          உணர்வு மொளியு மூக்கமு முணர்ச்சியும்
          புணர்வின் செல்வமும் போகமுஞ் சிறப்ப
    15     அமிழ்தியல் யோகத் தஞ்சனம் வகுத்து
 
              8 - 15: உயர்திறல்...........வகுத்து
 
(பொழிப்புரை) மிக்க வலிமையுடைய ஊழ்வினையினது சூழ்ச்சி யாலே ஒரோவழித் தவறினும் தவறுதலன்றித் தஞ்சோர் வினாலே சிறிதேனும் தவறு செய்யாதவரும், மறலியினையும் மாற்றி விடுதற் கேற்ற மருத்துவ நூல் அறிவினையுடையவரும், மன்னனுடைய உடலின் திறத்திலே அதனைக் காப்பாற்றும் தொழிலையே தமக்குத் தலையாய கடமையாக மேற்கொண்டு அத்தொழிற்கு இன்றியமையாத அரிய மருத்துவத் துறைகள் எல்லாம் பயின்று முதிர்ந்த பெருந்தன்மை யுடையருமாகிய மருத்துவர்கள் இயற்றியதும் தன்னை அணிவார்க்கு மதிநுட்பமும் ஒளியுடைமையும் ஊக்கமுடைமையும் பொருள்களை நுண்ணிதின் உணரும் ஆற்றலும் நுகர்வாற்றலும் இன்பமுடைமையும் ஒரு சேரச் சிறக்கச் செய்யும் இயல்புடையதும் தேவர் அமிழ்தத்தின் இயல்பினையுடையதுமாகிய மருந்து மையை அணிந்து கொண்டு என்க.
 
(விளக்கம்) அரசர்கள் விடியற்காலத்தே அஞ்சனம் அணிதல் மரபு. உணர்வு - மதி நுட்பம். உணர்ச்சி என்றது பொருள்களை நுண்ணிதின் அறியும் அறிவாற்றலை எனக் கொள்க. நூலுணர் உணர்ச்சி எனினுமாம். ''மதி நுட்பம் நூலோடுடையர்'' என்பதும் நினைக. புணர்வின் செல்வம் - நுகரும் ஆற்றலுடைமை, போகம் - இன்பம். யோகம் - மருந்து. பெருந்தகையாளர் இயற்றிய யோகத்து அஞ்சனம் என்க.