உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           கமழ்கொள் பூமியிற் கபிலை முன்னிறீஇ
          மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
          துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
          மலர்கண் ணளைஇய மந்திர நறுநீர்
    20    பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்திப்
          பால்பரந் தன்ன வால்வெள் விதானத்து
          மாலை தொடர்ந்த மங்கலப் பந்தர்
          விரிநூ லந்தணர் வெண்மணை சூழ்ந்த
          திருமணிக் கட்டிற் றிறத்துளி யெய்தி
 
                16 - 24: கமழ்..........யெய்தி
 
(பொழிப்புரை) பின்னர் நறுமணங் கமழா நின்ற நிலத்தின் மேல் பசுவினை முன்னே நிறுத்திக் கண்டு அதன் பின்னர் மகளிர் கூட்டுறவினைத் துவரத்துறந்த குற்றமற்ற தவவேடத்தையுடைய அகத் தழுக்கு நீக்கும் துறவியரை வணங்கிய முடியினையுடையனாய் அத் துறவியர் பலரும் ஒருங்கே நறுமலரிட்ட மந்திரித்த நறுமண நீரை வாழ்த்தித் தெளிப்ப அந்நீரை மரபாக மேற்கொண்டு பின்னர்ப் பால் பரவினாற் போன்று வெண்மை நிறமுடைய துகில் கட்டிய வெள்ளை மலர் மாலைகள் தூக்கப்பட்ட மங்கலப் பந்தரின்கண் மெய்ந் நூல் களை விரித்து ஓதும் அந்தணர் பொருட்டு இடப்பட்ட வெள்ளிய மணைப் பலகைகளாற் சூழப்பட்டு நடுவேகிடந்த அழகிய மணிகளிழைத்த அரசு கட்டிலின்கண் முறைப்படி ஏறியிருந்து, என்க.
 
(விளக்கம்) கபிலை - பசு. இப்பகுதியொடு, முனைவற் றொழுது முடிதுளக்கி முகந்து செம்பொன் கொளவீசி நினைய லாகா நெடுவாழ்க்கை வென்றிக் கோலம் விளக்காகப் புனையப் பட்ட வஞ்சனத்தைப் புகழ வெழுதிப் புனைபூணான் கனைவண் டார்க்கும் அலங்கலுங் கலனு மேற்பத் தாங்கினான் எனவரும் சீவகசிந்தாமணியை (2357) ஒப்பு நோக்குக, மந்திரித்த நறுநீர். விதானம் - மேற்கட்டி, விரிநூல் : வினைத்தொகை.