உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    40    தருமணன் முற்றத்துத் தானெதிர் சென்று
          திருமணி யம்பலங் கொண்டொருங் கேறி
          இரட்டைத் தவிசி னிருக்கை காட்டி
          இசைக்க வேண்டா விதையுன தில்லெனச்
          சிறப்புடைக் கிளவி செவ்விதிற் பயிற்றித்
    45    தளரிய லாயமொடு தன்புடை நின்ற
          பணியோள் பற்றிய பவழச் செப்பின்
          வாச நறுந்திரை வகுத்துமுன் னீட்டித்
          தாமரை யங்கையிற் றான்பின் கொண்டு
          குறிப்பி னிருக்க குமர னீங்கென
 
            40 - 49: தருமணல்............ஈங்கென
 
(பொழிப்புரை) உதயணன் வரவுணர்ந்த மன்னவன் கொணர்ந்து பரப்பிய மணலையுடைய அரண்மனை முன்றிலின்கண் தானே அவன் எதிரே சென்று வரவேற்று அழகிய மணியம்பலத்திற்கு அழைத்துச்சென்று அதன்கண் அவனோடு புகுந்து ஆண்டுள்ள இரட்டையிருக்கையைக் கைகளாற் காட்டி ''வத்தவவேந்தே! இவ் வரண்மனை நின்னுடைய அரண்மனையே யாகும் என்பதனை யான்கூற வேண்டாவன்றே!'' என்று தான் அவனைச் சிறப்பிக்குங் குறிப்புடைய மொழியைச் செவ்விதாகக் கூறிப் பின்னர் ''முருக! இதன்கண் அமருக'' என்று குறிப்பாற் கூறி அவன் இருந்த பின் னர்த் தளர்ந்த நடையையுடைய தோழியர் குழாத்தோடு தன் பக்க லிலே நின்ற பணிப்பெண் கையிலேந்திய பவளத்தாலியன்ற செப் பின் கண்ணிருந்த மணமுடைய நறிய வெற்றிலைச் சுருளைத் தன் கையாலெடுத்து வழங்கிப் பின்னர்த் தானும் ஒரு சுருளைத்தனது தாமரை மலர்போலும் கையிற்கொண்டு உபசரித்தபின் என்க.
 
(விளக்கம்) தருமணல் : வினைத்தொகை. இதை உனது இல் என இசைக்க வேண்டா என மாறுக. கூறாமலே அமையும் என்பது கருத்து. அன்புடையோரை வரவேற்கும் இப்பகுதியை, ''ஈங்கிது நின்னா டிப்பதி நின்னூர் இதுநின்னில் வீங்கிய திண்டோள் வெல்புகழாய் நின்கிளை யென்றாற் காங்கது வெல்லா மண்ணலு நேர்ந்தாங்கமைகென்றான்'' (சீவகசிந்தாமணி - 1636) எனவும், ''கைப்பொடி சாந்த மேந்திக் கரகநீர் விதியிற் பூசி மைப்படு மழைக்க ணல்லார் மணிச்செப்பின் வாச நீட்டச் செப்படு பஞ்ச வாசந் திசையெலாங் கமழ வாய்க்கொண் டொப்புடை யுறுவர் கோயில் வணங்குது மெழுக வென்றான்'' (சீவகசிந்தாமணி - 2739) எனவும் வரும் செய்யுள்களோடு ஒப்பு நோக்குக. திரை - வெற்றிலை. குமரன் : முன்னிலைப் புறமொழி.