உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    50    மடக்கிடன் மனமொடு மாணகர் புக்குத்
          தான்பயில் வீணை தங்கையு மொருத்தி
          காண்குறை யுடைமையிற் கவலு மாதலின்
          வல்லோர்ப் பெறாது தொல்குறை யுழத்தும்
          தாயும் யானு மெந்தை யாதலிற்
    55    றீதொடு வரினுந் தீர்த்தறன் கடனென
          மதியொண் காட்சி மாமுது சிவேதனை
          இதுநங் குறையா விசைத்தி சென்றென
 
            50 - 57: மடக்கிடல்..........சென்றென
 
(பொழிப்புரை) பிரச்சோதன மன்னன் உதயணகுமரனைத் தன் வயப்படுத்தித் தனது அரண்மனையிலேயே இருக்கச் செய்தல் வேண்டும் என்னும் கருத்துடனே அவனை அவ்விடத்தே இருத்தி நீங்கித் தனித்ததொரு மாண்புடைய மாளிகையிலே புகுந்து ஆங் கிருந்த மதிநுட்பமும் ஒள்ளிய நூலறிவு முடையவனாகிய அற னறிந்து மூத்த அமைச்சனாகிய சிவேதனை நோக்கி 'அன்பனே ! நீ உதயணன்பாற் சென்று நீ பயின்று முற்றிய வீணைக் கல்வியை எம் மக்களுள் வைத்து ஒருத்தி தானும் பயின்றறிதல் வேண்டும் என்னும் கருத்துடையளாய் அது பெறாது குறையாயிருத்தலாற் பெரி தும் கவல்கின்றனள் ஆதலின் அவளையீன்ற தாயும், தந்தையாகிய யானும் அக்குறை தீர்த்தற்கு நின்னைப்போன்று வீணைவல்ல வித்தகர் யாரையும் காணமாட்டாமை யானே நெடுநாளாகக் குறையுடையேமாகின் றோம் ; நீயோ எமக்குப் பெரிதும் கேண்மையுடையை ஆகலின் நின் தகுதிக்கேலாத் தீமையோடு இவ்வேண்டுகோள் நின்பால் வரினும் அக் குறை தீர்த்தல் நின்னுடைய கடமையேயாகும் என்று இதனை எனது வேண்டுகோளாகவே கூறி அவன் கருத்தறிந்து வருக' என்று வேண்டா நிற்ப என்க.
 
(விளக்கம்) தான் என்றது உதயணனை. தங்கை என்றது வாசவதத்தையை. காண்குறை : வினைத்தொகை. நின்னைப் போன்று வீணையில் வல்லோர் என்க. தொல்குறை - நெடுநாட் குறை. தன்கூற்றாகவே கூறவேண்டுமென்பான் தாயும் யானும் குறையுழத்தும் என்றான். எந்தை என்றது முகமன் மொழி. தீது - அவன் தகைமைக்கு ஒவ்வாமை.