உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    60    அதற்கோ ருபாய மறியா திருந்தோன்
          மகட்குறை யுணர்ந்து மன்னவன் விடுத்த
          திருமணி வீணை யிசைத்தலுந் தெருமந்
          தொருநிலை காறு முள்ளே யொடுக்கி
          விழுப்பமொடு பிறந்த வீறுயர் தொல்குடி
    65    ஒழுக்கங் காணிய வுரைத்ததை யொன்றுகொல்
          ஒளிமேம் பட்டன னொன்னா னென்றெனை
          அளிமேம் படீஇய வெண்ணிய தொன்றுகொல்
          உள்ள மருங்கி னுவத்தது செய்தல்
          செல்வ மன்னவன் சீலங் கொல்லோ
    70    யாதுகொன் மற்றிவ் வேந்தல் பணியென
 
             60 - 70: அதற்கோர்..........பணியென
 
(பொழிப்புரை) முன்னர் மன்னவன் மகன் ஒருத்தியைக்கண்டு காமுற்றுத் தான் வருந்தும் வருத்தத்தினின்றும் உய்தற்குரிய வழி யொன்றேனும் காணமாட்டா திருந்த உதயணகுமரன், பிரச்சோதனன் தன் மகளின் மனக்குறை யுணர்ந்து அது தீர்க்கும் பொருட்டுத் தன் பால் விடுத்த அழகிய மணிகள் பதித்த வீணையைப் பற்றிய வேண்டு கோளை அமைச்சன் தன்பாற் கூறக் கேட்டலும் நெஞ்சகம் ஞெரே லெனச் சுழல ஒரு முழுத்தங்காறும் அச்சுழற்சி புறத்தே தோன்றாமல் அகத்திலேயே ஒடுக்கியவனாய், இவ்வேந்தல் பணி சிறப்போடு தோன்றிய வீறு பெற்றுயர்ந்த பழங்குடியிற்றோன்றிய என்னுடைய நல்லொழுக்கத்தை ஆராய்ந்து காண்டற் பொருட்டுக் கூறிய பணிகொலோ? அன்றிப் பகை வனாகிய இவன் கடவுட்டன்மை மிக்கோனா யிருக்கின்றனன் என நன்கு மதித்து என்னைத் தன் அருளுடைமையாலே மேம்பாடுறச் செய்தற்குக் கருதிய கருத்தாற் பணித்த பணிகொலோ? அன்றித் தனது திரு மதுகை யாகத் தன் மனம் விரும்பியவாறெல்லாம் ஒழுகுவது இம்மன்னன் இயல்பு கொல் என்று ஐயுற்று என்க.
 
(விளக்கம்) அதற்கு என்றதுகள்விதன் காரிகையுண்ட பேரிசையாண்மை செறுநர்முன்னர்ச் சிறுமையின்றிப் பெறுவன் கொல் எனத் தான் மறுவந்து மயங்கும் மயக்கத்திற்கு (மாலைப் புலம்பல் - 124 - 27.) என்றவாறு. உபாயம் - தீரும் வழி. வீணை - வீணையைப் பற்றிய வேண்டுகோள். தெருமந்து - சுழன்று. ஒரு - நிலை ஒருமுழுத்தம். விழுப்பம் - சிறப்பு. வீறு - வேறொன்றிற்கு மமையாத தனிச்சிறப்பு. உரைத்ததை, ஐ - சாரியை. அளியாலே மேம்படுத்தற்கு என்க. ஒன்னான் ஒளி மேம்பட்டனன் என்று என மாறுக. உள்ள மருங்கில் உவந்தது செய்தல் குற்றமேயாயினும் அங்ஙனம் செய்தல் இவற்கியல்பு போலும் என்க.