உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
செய்யே னாகிச் சிறுமை
நாணின் உய்யே னாத
லொருதலை யதனால்
உயிர்கெட வருவழி யொழுக்கங்
கொள்ளார் செயிரறு
கேள்வி தேர்ந்துணர்ந் தோரென 90
வெல்லினுந் தோற்பினும் விதியென
வகுத்தல் பொருணூ
லாயம் புலவோர்
துணிவென மதிவழி
வலித்த மனத்த னாகி
|
|
86 - 92:
செய்யேனாகி..........மனத்தனாகி
|
|
(பொழிப்புரை) இதனை மேற்கோடல் இளிவரவாம் என்று நாணியான் இப்பணியை யேற்றுச்
செய்யேனாகின் அவளைக் காண்டற்குப் பிறிதொரு வழியின்மையின் யான்
இறந்துபடுதல் ஒருதலை. இங்ஙனமாகலினாலும் 'உயிர்கெட வருவழி
ஒழுக்கத் திற் சிறிது பிறழ்ந்தும் அவ்வுயிரைப் பாதுகாத்துக் கோடல்
வேண்டும். உயிரைவிட்டு ஒழுக்கத்தைப் பேணார் குற்றமற்ற நூற்
கேள்வியை ஆராய்ந்துணர்ந்த அறிவுடையோர்' எனவும், அங்ஙனம் ஒழுக்கத்தை
விட்டுழி வென்றாலும் தோற்றாலும் அஃது ஊழ் வினைப் பயன் என்று கோடல்
அரசியல் அறம் என்றும் வகுத்தோது தல் அறம் பொருள் இன்பம் என்னும்
முத்திறத்து நூல்களில் வைத்து அரசியலுக்கு இன்றியமையாத பொருணூலை
ஆராய்கின்ற புலவருடைய துணிவு ஆகும் எனவும், தனது கூர்த்த அறிவினால் தெளிந்த
மனத்தையுடையனாகி என்க.
|
|
(விளக்கம்) சிறுமை நாணிச் செய்யேனாய்
மறுத்துவிடுவேனாயின் என்க. அக்காமநோய் என்னைக் கொல்லுதல் தப்பாது
என்பான் ''உய்யேனாதல் ஒருதலை'' என்றான். உயிர்கெட வருவழி ஒழுக்கங்
கொள்ளாமை அரசர்க்கு மட்டும் சிறந்த அறமாகும். இவ்வாறாதலை.
'செறுநரைக் காணிற் சுமக்க' 'கொக்கொக்க கூம்பும் பருவத்து' ''எனவரும்
திருக்குறட் பொருட்பாலகத்தும் கண்டுணர்க. ஈண்டுச் சிறுமை மாற்றான் ஏவல்
கேட்டு நடத்தல் என்க. அங்ஙனம் ஒழுக்கம் நீத்து உயிர் காத்த பின்னரும்
ஒரோவழித் தோல்வியுறுமாயின் அஃது ஊழே யாகும் என்று கொள்க. என்பது
புலவோர் துணிவு என்க, வலித்த - துணிந்த.
|