உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           ஆன்பாற் றெண்கட லமுதுற வளைஇய
          தேன்பெய் மாரியிற் றிறவ தாகப்
          பருகு வன்ன பயத்தொடு கெழீஇ
          உருகு வன்ன வுவகைய னாகி
 
        101 - 104: ஆன்பால்..........உவகையனாகி
 
(பொழிப்புரை) அக்கருத்தாலே மன்னவன் பணி ஆன்பாலா னியன்றதொரு கடலின்கண் அமைத்த அமுதத்திலே கலத்தற் பொருட்டுத் தேனாகப் பெய்ததொரு மழைபோலப் பெரிதும் நலமுடையதொரு பணியே ஆகிவிடுதலாலே அப்பணியால் வரும் பருகற்கொத்த சிறந்த பயனைக் கருதி மனம் உருகி ஒழுகுவது போலும் பேருவகையுடையனாகி என்க.
 
(விளக்கம்) 'திருவிளை தேம்பெய் மாரி பாற்கடற் பெய்த தென்றாள்' எனவரும் சீவக சிந்தாமணியையும் (2077) நினைக. உருகு - உருகுதல். மனம் உருகுதல் போன்றதோர் உவகை என்க.