உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    105    இறந்தன னிவனென விளிப்பரந் துறாது
          சிறந்தன னிவனெனச் செவ்வ னோக்கிக்
          கடந்தலை வைக்குங் கால மிதுவென
          அவன்றலை வைக்கு மாணை யேவலும்
          உவந்ததை யெல்லா முரைமி னீரெனப்
    110    பேர்ந்தனன் விடுப்பப் பெருமூ தாளன்
          நேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்ப
 
        105 - 111: இறந்தனன்..........உரைப்ப
 
(பொழிப்புரை) அறனறிந்து மூத்த அமைச்சனாகிய சிவேதனை நோக்கி அன்புடையீர்! தன்னாற் சிறையிடப்பட்ட இவ்விளைஞன் இறந்துபட்டான் என்னும் பழி உலகத்தே பரவி நிலைபெறாத படி யும் இவன் மிகமிக ஆக்க மெய்திச் சிறப்புற்றான் என்னும் புகழ் பரவும்படியும் நன்கு ஆராய்ந்து தெளிந்து மன்னர் மன்னன் என்னைக் கடமை ஏற்பிக்குமோர் ஆகூழ்க் காலம் போலும் இஃது என்று கருதியும், அவ்வரசன் என்பாற் பணிக்கும் ஆணையாகிய இக்குற்றேவலை, ஏற்றுப் பெரிதும் மகிழ்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சியை நீவிர் மன்னர்பாற் கூறுக என்று கூறி எழுந்து பின்சென்று விடை கொடுப்ப அவ்வமைச்சனும் சென்று அங்கு நிகழ்ந்ததை எல்லாம் நீண்ட புகழையுடைய பிரச்சோதன மன்னனுக்குக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) இளி - இழிசொல் ; பழி. கடம் - கடமை. காலம் - ஆகூழ்க் காலம். ஆணையாகிய ஏவலென்க. பெருமூதாளன் - சிவேதன். நெடுந்தகை - பிரச்சோதனன்.