உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           முத்தின ருத்தியர் மும்மணிக் காசினர்
          கச்சினர் கண்ணியர் கதிர்வெள் வளையினர்
          சில்கலத் தியன்ற வணியின ரல்லது
          பல்கலஞ் சேரா மெல்லென் யாக்கையர்
   125    அசைவில் குமரரை யாடிடத் தணங்கு
          நசையுட் கொண்ட நன்மை யியன்று
          விழுத்தகைத் தெய்வம் வழுத்தா மரபிற்
          றார்ப்பொலி மேனிக் கூர்ப்பணங் கொடுக்கிய
          மண்டு தணிதோண் மாசின் மகளிர்
 
           121 - 129: முத்தினர்.........மகளிர்
 
(பொழிப்புரை) முத்துமாலையணிந்தவரும், உத்தியணிந்தோரும், மூன்றுவகை மணிகள் பதித்த பொன்னணிகலன் அணிந்தோரும், கச்சணிந்தோரும், ஒளியுடைய சங்குவளையணிந்தோரும் ; என இங்கனம் மிகச் சிலவாகிய அணிகலன்களால் மட்டுமே அழகு செய்யப்பட்டவர்களே யன்றிப் பலவாகிய அருங்கலங்களால் அணி செய்யப்படாத மெல்லிய யாக்கையையுடையராய், பகைவர் முதலி யோரானும் அசைதலில்லாத ஆண்மையையுடைய ஆடவரைத் தாம் விளையாடுமிடத்தே தமது தோற்றத்தாலேயே பெரிதும் வருத்தும் தன்மையையும், அத்தகைய இளைஞர் விரும்புதற்குக் காரணமான பெண்மை நலம் உருப்பெற்றுச், சிறந்த தகுதியையுடைய தெய்வத் தையும் கைகூப்பி வணங்காத முறைமையினையும், மலர்மாலைகளாற் பொலிவு பெற்று விளங்கும் இறுமாப்புடைய தெய்வ மகளிரையும் தம் மழகாலே வருத்தி அடக்கிய நாளுக்கு நாள் மிக்கு வளர்கின்ற குளிர்ந்த தோளையுடையராய குற்றமற்ற அப்பெதும்பை மகளிர் என்க.
 
(விளக்கம்) உத்தி - சீதேவி என்னும் தலைக்கோலம். மும் மணிக் காசு புருடராகம் வைடூரியம் கோமேதகம் என்னும் சிறந்த மூன்று வகை மணிகள் பதித்ததொரு பொற்கலம். இதனை, 'மும்மணி யாவன சொன்ன புருடராக முறுவயி டூரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர் எனவரும் (திருவால - 26-22) செய்யுளானும் உணர்க. பகை வர் முதலியவர் பால் அசைவில் குமரரை என்க. நசை - விருப்பம், விருப்பத்தை அகத்தே அடக்கிக் கொள்ளும் பெண்மை நலம் எனினுமாம். கூர்ப்பு - மிகுதி, செருக்கு. அணங்கு - தெய்வப்பெண். ஒடுக்கிய - அடக்கிய. ஒடுக்கிய தோள், மண்டு தோள், தணிதோள் எனத் தனித் தனி கூட்டுக. மண்டுதல் - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எழுச்சியுறுதல்.