உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           தெய்வத் தாமரைத் திருமகட் கெடுத்தோர்
    150    ஐயப் படூஉ மணியிற் கேற்ப
          ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்
          பெண்மையும் பெருமையும் பிறவு முடைமையிற்
          பாசிழை யாயத்துப் பையென நின்ற
          வாசவ தத்தை வல்ல ளாகென
    155    ஊழ்முறை பொய்யாது கரும மாதலின்
          யாழ்முறைக் கரும மிவளதென் றருளி்
 
            149 - 156: தெய்வ.........அருளி
 
(பொழிப்புரை) கடவுட் பண்புடைய தாமரை மலரின்மேல் வீற்றி ருக்கும் திருமகளைத் தம்மிடத்தினின்றும் காணாமற் போக்கியவர் தன்னைக் காண்பரேல் இவள்தான் திருமகளோ? என்று ஐயுறுவதற் குக் காரணமான தனது பேரழகிற்குப் பொருந்தும்படி மேலும் நுண் ணறிவு ஒளியுடைமையும் நிறையுடைமையும் பெருகிய ஒளியுடை மையும் பெண்மைப் பண்புடைமையும் பெருமையும் பிறவுமாகிய பேறுகள் எல்லாம் பெற்றிருத்தலாலே பசிய அணிகலன்களையுடைய தன் தோழியர் குழுவின்கண் பெரிதும் அடங்கி நின்ற வாசவதத்தையை அவ்வரசன் சிறப்பாக நோக்கினன் ; உலகின்கண் நிகழும் செயல்கள் எல்லாம் ஊழ்வினை வகுத்தபடியே பொய்த்தலின்றி நிகழ்வனவேயாத லால் நோக்கிய மன்னன் இவ்வாசவதத்தையே (உதணன்பால்) யாழ்கற்று வல்லுநள் ஆகுக! என்று கருதி முன்னிலைப் புறமொழியாக யாழ்பயிலும் முறையாகிய செயல் இவளுடைய தாகுக! என்று கூறி என்க.
 
(விளக்கம்) கெடுத்தோர் - காணாமற் போக்கியவர். அணி - அழகு. ஒண்மை - கூரிய அறிவு. நிறை - மறைபுலப்படாமல் நிறுத்தும் உள்ளம். இவற்றோடு 'செறிவு நிறையுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான' எனவரும் தொல்காப்பியமும் (பொருளியல் 15.) நினைக. ''ஊழ்முறை பொய்யாது கருமம்'' என்றது நூலாசிரியர் கூற்று.