உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           மற்றவ ணின்ற பொற்றொடி மகளிரைக்
          குற்றமில் குறங்கிற் கோ...வல மேற்றிக்
          கோதை மார்பிற் காதலி னொடுக்கிப்
    160    பந்துங் கிளியும் பசும்பொற் றூதையும்
          கந்தியன் மயிலுங் கரந்துறை பூவையும்
          கண்ணியுங் கழங்குங் கதிர்முலைக் கச்சும்
          வண்ண முற்றிலும் பவழப் பாவையும்
          தெளித்தொளி பெறீஇய பளிக்குக்கிளிக் கூடும்
    165    அவரவர் மேயின வவ்வயி னருளி
          அடிசில் வினையும் யாழின் றுறையும்
          கடிமலர்ச் சிப்பமுங் கரந்துறை கணக்கும்
          வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
          கற்றவை யெல்லாங் காட்டுமி னெமக்கென
    170    மருளி யாய மருளொடும் போக்கி
 
        157 - 170: மற்றவண்..........போக்கி
 
(பொழிப்புரை) பின்னர் ஆங்கு நின்ற ஏனைமகளிரை அன்புடன் அழைத்து வேந்தன் ஆர்வத்தோடு குற்றமற்ற தனது வலத்துடையின் மேல் இருப்பித்து மார்பின் அவர் ஒடுங்குமாறு மகவன்பினாலே தழுவிப் பின்னர் அவர்கட்குப் பந்துகளும், கிளிகளும், பசிய பொன்னாலியன்ற தூதைகளும், அழகிய கழுத்தினையுடைய அழகிய மயில்களும், குடம் பைகளில் மறைந்து வாழும் பூவைகளும், மாலைகளும், கழங்குகளும், ஒளியுடைய முலைக்கச்சுகளும், வண்ணந் தீற்றிய சிறு சுளகுகளும், பவழத்தாலியன்ற பாவைகளும், தெளிந்த ஒளியுடையனவாக்கி மேலும் ஒளி செய்வித்த (மெருகேற்றிய) பளிங்காலியன்ற கிளிக்கூடுகளும், இன்னோரன்ன பிறவுமாகிய விளையாட்டுப் பொருள்களுள் வைத்து ஒவ்வொருவர்க்கும் அவ ரவர் விரும்பியவற்றை அவ்விடத்தேயே வழங்கிப் பின்னர் அம்மகளிரை நோக்கி 'நீங்கள் பயின்றுள்ள வித்தைகளாகிய உணவு சமைக்கும் தொழிலும் யாழியக்கும் தொழிலும் மணமுடைய மலர்களால் உருவஞ் செய்தலாகிய சிற்பத் தொழிலும் மறைந்துறையும் தொழிலும் எழுதுகோலால் ஓவியம் வரை யுந் தொழிலும் பல்வேறு வகையாகப் பேசுகின்ற தொழிலும் உட்பட, அனைத் தையும் எம்முன் செய்து காட்டுமின் என்று அவரியற்றிய அவ்வித்தைகளைக் கண்டு என்க.
 
(விளக்கம்) தூதை - ஒருவகைப் பாத்திரம். கந்து - அடிக்கழுத்து. முற்றில் - முறம். தொளித்தொளி பெறீஇய என்றது தேய்த்து மெருகேற்றிய என்றவாறு. அடிசில் வினை - உணவு அமைக்கும் மடைத் தொழில். மகளிர்க்கு ஏனைத் தொழிலினும் இது சிறப்புடையதாகலின் முற்பட இத்தொழிலை வினவினன். மலர்ச்சிற்பம் - மலராற் செய்யும் உருவங்கள் என்க. கரந்துரை கணக்கும் என்றும் பாடம். இதனை ஒருவகைக் கணிதம் என்ப. வாக்கின் விகற்பம் - பல்வேறு குரல் தோன்றப் பேசுமொரு வித்தை என்க.