உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    170    மருளி யாய மருளொடும் போக்கி
          நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு
          நியம விஞ்சன மமைமின் விரைந்தென
          ஈன்ற தாயு மென்மகட் கித்தொழில்
          மாண்ட தென்று மனத்திற் புகல
 
        170 - 174: மருளி..........புகல
 
(பொழிப்புரை) இவ்வாறு மன்னன் தன் மகளிரோடு அளவளாவி மகிழ்ந்து மயக்கத்தையுடைய அம்மகளிர் கூட்டத்தைத் தானும் மருளு டையவனாகவே விடைகொடுத்துப் போக்கிய பின்னர், ஏவலரை நோக்கி நம் வாசவதத்தை பயிலவிருக்கும் மங்கல விசைக்கருவியாகிய யாழ்ப் பயிற்சிக்கு விதிக்கப்பட்ட கருவிகளையெல்லாம் அமைத்திடுமின் என்று கட்டளையிடா நிற்ப, இச் செயல் கண்ட கோப் பெருந்தேவியாகிய வாச வதத்தையின் நற்றாயும், என் மகட்கு இத்தொழில் மாட்சிமை தரும்ஒரு தொழிலேயாகும் என்று தன் நெஞ்சினுள்ளேயே பெரிதும் அதனை விரும் பாநிற்ப என்க.
 
(விளக்கம்) மருளியாயம் - மயக்கமுடைய மகளிர்குழு. மன்ன வன்றானும் அம்மக்களால் மருட்டப்பட்டான் என்பார் மருளொடும் போக்கி என்றார். மங்கலக் கருவி என்றது யாழினை. நியம விஞ்சனம் - யாழாசிரியர் யாழ் பயிற்றுவோர்க்கு இன்றி யமையாதன என நியமித்த துணைக்கருவிகள் என்க. விஞ்சனம் - கருவி. ஈன்ற தாய் என்றது வாசவதத்தையின் நற்றாயை. புகல - விரும்ப. பலர் கூற்று