உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
175 மழலைக்
கிண்கிணிக் கழலோன்
பெருமகன்
அரும்பெறற் றத்தைக் காசா
னாகிப் போக வீணை
புணர்க்கப் பெற்ற
தேசிக குமரன் றிருவுடை
யன்னென அடியரு மாயமு
நொடிவனர் வியப்ப 180 ஏனைத் தாயரு
மானா தேத்த
வத்தவர் பெருமகன் வல்ல
வீணை தத்தை
தனக்கே தக்க
தாலென வேட்டது
பகருங் கோட்டி
யாகிக்
கோட்டமின் முற்றங் குமிழ்குமிழ்த் துரைப்ப
|
|
175 - 184:
மழலை........உரைப்ப
|
|
(பொழிப்புரை) இச்செய்தியறிந்த
ஏவன் மாக்களும் பணி மகளிர் குழுவும் ''இனிய ஓசையையுடைய
கிண்கிணியணிந்தவளும் மறக்கழல் கட்டிய திருவடியையுடைய மன்னன் மகளும்
பெருந்தகைப் பெண்ணும் அரும்பெறற் செல்வம் போல்வாளுமாகிய வாச
வதத்தைக்கு யாழாசிரிய னாகி இன்பந்தரும் வீணைவித்தை கற்பிக்கும்
பேறுபெற்ற ஆசிரியனாகிய உதயணகுமரன் பெருந்திருவுடையன் ஆயினன் கண்டீர்!''
என்று கூறுவா ராய்ப் பெரிதும் வியவா நிற்பவும், வாசவதத்தையின்
நற்றாயல்லாத ஏனைய தாயரெல்லாம் ஓய்வின்றிப் புகழா நிற்பவும், வத்தவர்
பெருமானாகிய உதய ணன் பயின்று வல்ல வீணை வித்தை உஞ்சைநாட்டுப்
பெருமகளாகிய வாசவதத்தை ஒருத்திக்கே தகுதியுடைத்தாம் என்று இவ்வாறு
அம்மக்கள்மனக் கோட்டம் இல்லாத மன்னவன் அரண்மனை முன்றிலின்கண்
கூட்டம் கூட்ட மாகக் குழுமி நின்று தத்தம் மனம் விரும்பியவாறெல்லாம்
தம்முள் முகிழ் முகிழ்த்து மெல்லப் பேசாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) கிண்கிணிப் பெருமகள் கழலோன் பெருமகள்
எனத் தனித்தனி கூட்டுக. அடியரும் ஆயமும் வியப்பத்தாயரும்
ஏத்த என்க. வத்தவனாகிய நல்லாசிரியனுக்கு ஏற்ற நன்மாணவி வாசவதத்தையே
என்பார் வத்தவர் பெருமகன் வல்ல வீணை தத்தை தனக்கே தக்கது என்றார்.
ஏனைத்தாயர் என்றது பிரச்சோதனனுடைய ஏனைத்தேவியரை. கோட்டம் -
மனக்கோட்டம். உடையான் பண்பு உடைமை மேலேற்றப்பட்டது. முகிழ்
முகிழ்த்துரைத்தலாவது ஒலி வெளிப்படாமல் மெல்லப் பேசுதல்.
|