உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
34. யாழ் கைவைத்தது |
|
185 பொன்னகற்
கொண்ட பூவும்
புகையும் அவ்வகற்
கொண்ட வவியும்
பிரப்பும் செம்முது
செவிலியர் கைபுனைந்
தேத்திச் சந்தன
நறுநீர் மண்ணுறுத்
தாட்டி மறுவில்
வெண்கோட்டு மங்கலம் பொறித்த 190
பெருவெண் சீப்பிற் றிருவுற
வாரிச் சுருண்முறை
வகுத்துச் சூட்டுப்
புரியுறீஇக்
கருங்குழல் கட்டிக் கன்னிக்
கூழை பொன்னி
னாணிற் புடையெடுத் தியாத்து
|
|
185 - 193:
பொன்னகல்...........யாத்து
|
|
(பொழிப்புரை) செவ்விய
முதுமைப் பருவமெய்திய செவிலித் தாயர் இடத்தை அணிசெய்து அவ்விடத்தே
பொன்னாலியன்ற அகல்களிலே பலிப் பொருளும் பிரப்பும் வைத்துப் பொன்
அகலிலே கொணர்ந்த நறுமலர் சிதறி நறுமணப் புகைகாட்டிக் கடவுளை வாழ்த்தி
வணங்கிப் பின்னர்ச் சந்தனங் கலந்த நறிய மணங் கமழுகின்ற நீராலே
குளிப்பாட்டிப் பின்னர் யானையினது குற்றமற்ற வெள்ளிய
மருப்பாலியற்றப்பட்டு மங்கல முடைய ஓவியம் பொறித்த பெரிய
வெள்ளைச்சீப்பினாற் கூந்தலை அழ குண்டாக வாரிச் சுருளையாக வகுக்கும்
முறையில் வகுத்தும் சூட்டாகப் பொன்னாணாற் கட்டியும் கரிய குழலாகக்
கட்டியும் கன்னிப் பருவத் திற் கியன்ற கூழையாகப் பக்கத்துக் கூந்தலை
யெடுத்துப் பொன்னாணினாற் கட்டியும் என்க.
|
|
(விளக்கம்) அவ்வகல் - முற்கூறப்பட்ட பொன்னகல். அவி - கடவுட்பலி. பிரப்பு -
குறுணியளவாகப் பொருள்களை நிரப்பி வைக்கும் பிரப்பங்கூடை. ஆகுபெயரால்
அவற்றுள் நிரப்பும் பொன்மணி முத்து முதலியவற்றைக் குறிக்கும் மங்கலச்
சின்னங்களு மாம். திரு - அழகு. சுருள், சூட்டு, குழல் கூழை என்பன கூந்தல்
ஒப்பனை வகைகள். இவ்வொப்பனை ஐவகைப்படுதலின் கூந்தலை
ஐம்பால் என்றுங் கூறுப.
|