உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           மட்டங் குயின்ற மங்கல வல்குற்
          பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடரத்
          திருமுகை முருக்கின் விரிமலர் கடுப்பச்
          செறிமலர் படினுஞ் சீறடி நோமென
    210    நெறியெனப் படுத்த நிலப்பெருந் தவிசின்
          உள்ளகத் தொடு............மெல்லடி
          அரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வரங்கின்
          உழைச்சென் மகளி ருக்க மேற்றிச்
          சித்திரம் பயின்ற செம்பொ னோலை
    215    முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசை இச்
          சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த
          கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை
          ஆல வட்ட நாலொருங் காடப்
          பொன்னிய லாய்வளைக் கன்னிய ரசைப்ப
 
        206 - 219: மட்டம்..........அசைப்பப்
 
(பொழிப்புரை) அல்குலின்கண் சமன்செய்து கொய்சகமிட்டுடுத்த மங்கல வண்ணமாகிய வெண்ணிறப் பட்டாடையின் முன்றானைக்கண் பசிய மேகலை யணிகிடந்து ஒளிரா நிற்பவும் அழகிய அரும்புகளை யுடைய முருக்கினது விரிந்த மலர்போன்று சிவந்த சிற்றடியின்கண் செறிந்த மலர்கள் படினும் நோகும் என்று செல்லும் நெறிபோல விரித்த நிலத்திலிடும் நடைத்த விசின்மேல்உள்ளகத்தோடு.........மெல்லிய அடியின்கண் அணிந்த பரலையுடைய பொன்னா லியன்ற கிண்கிணி ஆரவாரிப்பப் பக்கத்தே வருகின்ற பணிமகளிர் சிற்றால வட்டத்தை உயர்த்தி வரவும் ஓவியம் வரையப்பட்ட செவ்விய பொன்னா லியன்ற ஓலையாற் செய்து விளிம்பில் முத்துக்கள் கோக்கப்பட்டனவும் அசையா நின்ற சிரலின் சிறகுபோல வரிசையாகக் கோடிட்டு விரித்துச் சிற்பத் தொழில் செய்யப்பட்டனவும் சூதாடு தொழிற்குதவும் பவழத்தைக் கடைந்து செய்த மணிக்காம்புகளையுடையனவும் ஆகிய நான்கு பேரால வட்டங்கள் ஒருங்கே அசையும்படி பொன்னா லியன்ற அழகிய வளைய லணிந்த கன்னிமகளிர் அசைப்பவும் என்க.
 
(விளக்கம்) மட்டங்குயின்ற உடை மங்கலப் பட்டுடை அல்குற் பட்டுடை எனத் தனித்தனி கூட்டுக. பைம்பூண் என்றது - மேகலையணியை. முருக்கின்மலர் கடுப்பச் சிவந்த சீறடியென வரு வித் தோதுக. நெறி - செல்லும் வழி - வழிபோல நிலத்தே நெடுகிலும் செய்துபோகட்ட நிலத்தவிசு என்க. உக்கம் - சிற்றாலவட்டம். அசைஇ சிரற் சிறகு எனக்கொண்டு அளபெடையை இசைநிறை யாக்குக. அசை சிரற் சிறகு : வினைத்தொகையென்க. கவற்றுவினை சூதாடுந் தொழில்; இத்தொழிற்குரிய கருவிகள் பவழத்தாற் செய்யப்படும் என்ப தனை, 'பொற் கவறு அங்குருளக் குலவும் பவழ வுழக்கில் கோதை புரளப் பாடி இலவம் போதேர் செவ்வாய் இளையோர் பொரு வார்க் காண்மின்' (சீவகசிந் - 927) எனவும் 'கவளயானைப் பணையின் யாளி கால் வகுத்த பலகையிற் பவளமான நீலமான கருவிமுன் பரப்பினார்' (வில் - பாரதம் சூதுபோர்ச் - 174) எனவும் பிற சான்றோர் கூறுமாற் றானும் உணர்க.இன்னும் ஆலவட்டத்தின் இயல்பை,
   'அணித்தகு பவள மேற்பக் கடைந்துமுத் தழுத்தி யம்பொன்
     துணித்தடி விளிம்பு சேர்த்தித் தொழுதகச் செய்த வண்கை
     மணிச்சிரற் சிறகு நாண வகுத்தசாந் தால வட்டம்
     பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்வித் தாரே'
  எனவரும் சீவக சிந்தாமணியினும் (2478 காண்க.)