மூலம்
உரை
1. உஞ்சைக்காண்டம்
34. யாழ் கைவைத்தது
கஞ்சிகை திறந்த பொழுதி னன்றுதன
காட்சிக் கொத்த கள்வ னாதலின்
மேற்படு நோக்கமொ டிருவரு மெய்தி
ஏப்பெறு துயரமொ டிலங்கிழை யிறைஞ்சிப்
பொற்காற் படுத்துப் பூந்துகில் வளைஇக்
245 கைக்கோற் சிலதரொடு கன்னியர் காப்பத்
தெய்வத் தன்ன திறலோன் காட்டக்
கைவைத் தனளாற் கனங்குழை யாழென்.
240 - 247: அன்றுதண்..........யாழென்
(பொழிப்புரை)
உதயணன் நளகிரியை அடக்கிய நாளிலே தனது காட்சிக்குப் பொருந்திய உள்ளங்கவர் கள்வனே இவ்வாசானாகலின் (உறாஅதவள் போன்று) மேற்படு நோக்கமாக நோக்கினள், அவனும் அன்று தன் காட்சிக்கொத்த கள்வியே தன் மாணவியாதல் கண்டனன் கண்டு (உறாஅதான் போன்று) மேற்படுநோக்கே நோக்கினன். இவ்வாறு இருவரும் நோக்கமெய்தியபொழுது காமன் எய்தகணையாலுற்ற துயரத் தோடு விளங்கிய அணிகலன்களையுடைய நங்கையும் ஒருவாறு உதயண குமரனை வணங்கா நிற்ப, அவ்வழிபாடு முடிதலும் கன்னி மகளிர் பொன்னா லாகிய கால்களை நிறுத்தி அழகிய துகிலை வாசவதத்தை தமியளாக வளைத்துக் கட்டிக் கையிற் பிரப்பங்கோல் பிடித்த ஏவலாளரோடு காவல் செய்து நிற்பக் கடவுள்போன்ற ஆற்றலுடையவனாகிய உதயண நம்பி கற்பிக்கக் கனவிய குழையை யுடைய வாசவதத்தை யாழைக் கையிலெடுத்துப் பயிலத் தொடங்கினள் என்க.
(விளக்கம்)
இப்பகுதியில் அவாய் நிலையாக வேண்டப்படும் மொழிகளை யெல்லாம் வருவித்தோதுக. மேற்படுநோக்கம் - ஏதின் நோக்கம். இறையஞ்சி யாழ் கைவைத்தனள் என்க. கைவைத்தல் - தொடங்குதல். சிலதர் - ஏவலர். கனங்குழை : அன்மொழித் தொகை.
34. யாழ்கை வைத்தது முற்றிற்று