உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
          ..........ப்புகாஅ ரியல்புணர்ந் தோரென
          மதியோர் மொழிந்த திதுவென் றெண்ணி
          இன்னவை பிறவுந் துன்னினர் கிளந்து
     15    வேந்திடை யிட்ட வெஞ்சொ லாதலிற்
          சேர்ந்தோர் மாட்டுஞ் செப்ப றீதென
          உரைப்போர் நாவிற் குறுதி யின்மையின்
          நினைத்தது மிகையென நெஞ்சு வலியுறீஇ
          மனத்ததை யாக மாந்த ரடங்கலின்
     20   வம்ப மாக்கள் வாயெடுத் துரைக்கும்
          கம்பலை யின்மையிற் கடிநகர் தேறி
          ஆங்கன மொழுகுங் காலை
 
                  (இதுவுமது)
        12 - 22: புகாஅ..........காலை
 
(பொழிப்புரை) ..........புகுதமாட்டார் உலகியல் புணர்ந்த அறிஞர் கூறிய அறிவுரையாகும் இஃதென்றும் நினைந்து இவை போல்வன பிறவும் ஒருவரோடொருவர் கூடியவராய்ப் பேசாநிற்ப, அவர் செயல் கண்ட சான்றோர் சிலர், நமரங்காள்! நீங்கள் பேசுகின்ற மொழி வேந்தனோடு தொடர்புடைய பழிச்சொல்லாகலின் நுங்கள் நண்பர் மாட்டும் பேசுதல் தீமைதருவதாகவே முடியுங்கண்டீர். இப்பழிச் சொல் ஒரோ வழி நம்மன்னன் செவிக்கெட்டுமாயின் அம்மொழி பேசியவர் நாவிற்குப் பின்னர் உய்தியின்றாகும் கண்டீர். இம்மொழியை நம்மனோர் நினைத்ததே மிகையாய குற்றமாம். என்று கூறி அவர்தம் நெஞ்சினை அச்சுறுத்தி வலிந்து கூறி அப்பழி அவரவர் மனத்தளவின தாகும் படி அடக்கியதனாலே ஊர்வம்பு பேசித்தரியும் இயல்புடைய அம் மாக்கள் பேசுகின்ற ஆரவாரம் இல்லையாக. இல்லையாகவே காவலுடைய அந்நகர் வாழ் மக்கள் தத்தமக்கு உறுதி தெளிந்து அதற்கேற்ப வாளா ஒழுகி வருகின்ற பொழுது என்க.
 
(விளக்கம்) 12 ஆம் வரியில் ஒரு சீர் அழிந்துபோனமையால், 12-13 ஆம் வரிகளின் பொருள் நன்கு புலப்படவில்லை. வேந்திடை இட்ட வெஞ்சொல் - வேந்தன்பால் வைத்துப் பேசும் பழிமொழி. சேர்ந்தோர் - நண்பர். மாந்தர் என்றது, சான்றோர் என்பதுபட நின்றது. மாந்தர் வெஞ்சொலாதலின் செப்பல் தீது என, மிகையென வலியுறீஇ அடக்கலின் என இயைக்க. கம்பலை - ஆரவாரம். நாவிற் குறுதியின்மையின் என்றது அரசன் நாவினை அரிவிப்பன் என்று அச்சுறுத்தியபடியாம். 'அச்சமே கீழ்கள தாசாரம்' ஆகலின் கம்பலையிலதாயிற்று என்க. தேறி அவ்வாறு ஒழுகுங்காலத்தே என்க. "காவன் மன்னவர் காய்வனசிந்தியார் நாவினும் உரையார் நவை யஞ்சுவார்" என வரும் சீவகசிந்தாமணியையும் (169) ஈண்டு நினைக.