உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
ஆங்கன் மொழுகுங் காலை
யோங்கிய மாணிப்
படிவமொடு மதிலுஞ்
சேனையுள் ஓதிய
காலத் துடன்விளை யாடித் 25 தோழ மாக்க
டொழுதியிற் கூடிப்
பால குமரன் பணியி
னொருநாள் மாலையுஞ்
சாந்து மடியும்
பெய்த கையுறைச்
செப்போடு கடிநகர்ச்
சென்ற வயந்தக
குமரனை நயந்துமுக நோக்கிப் 30 பண்டியா
னிவரைப் பயின்றுழி
யுண்டெனக் கண்டறி
விலீரெனக் கரந்தவன்
மறுப்பக்
......போல..................
இசையா மாக்கண்மு னியல்பில
சொல்லி
அன்றுதலைப் பட்ட வார்வலர் போல
|
|
(வயந்தகனும் உதயணனும்
கூடுதல்) 22 - 34:
ஓங்கிய..........ஆர்வலர்போல
|
|
(பொழிப்புரை) மதிலையுடைய உஞ்சை
நகரத்தே அரண்மனை யகத்தே வயந்தகன் தன்னுருக்கரந்து ஒரு பிரமசாரி
வடிவத்தோடு மன்னன் மக்கள் தோழர் கூட்டத்தே கூடி அம்மன்னன் மக்கள்
கல்வி பயிலும்பொழுதும் அவருடன் கூடி விளையாடி உறைகின்றவன் பிரச்சோதன
மன்னன் மகனாகிய பாலகுமரனுடைய ஏவலாலே ஒருநாள் உதயணனுக்கு மலர்மாலையும்
சந்தனமும் ஆடையும் வைக்கப்பட்டதொரு கையுறைப் பொருளாகிய செப்பினை
ஏந்தி அவ்வுதயணன் மாளிகையிற் புகுந்தானாக, அவ்வாறு சென்ற வயந்தகனுடைய
முகத்தை உதயணன் விரும்பிக் கூர்ந்து நோக்கி ஐயுற்று அவன் கேட்கும்
பொருட்டு முன்னிலைப் புறமொழியாக 'பண்டொரு காலத்தே ஓரிடத்தே யான்
இவரைக் கண்டு பழகியதுண்டுபோலும் (இவரை எங்கோ பார்த்ததாக நினைவு
எழுகின்றது) என்று கூறினன். அது கேட்ட வயந்தகன் அங்ஙனமிராது நீயிர்
என்னைப் பண்டு கண்டு அறிவீரலீர் என்று மறைத்துக்கூறாநிற்பக் குறிப்பான்
உணர்ந்து கொண்ட உதயணகுமரனும் அவன் கூற்றை ஒப்புவான் போன்று
அங்குள்ள ஏதிலார் முன்னர்ப் பண்டறிந்தோர் இயல்புக்குப் பொருந்தாத
பிறமொழிகள் பலவற்றைப் பேசி அவர் ஐயுறாதபடி செய்த பின்னர் அற்றை
நாளிலேயே முதன் முதலாக ஒருவரை ஒருவர் கண்டு கூடிய புதிய நண்பர்கள்போல
நடித்துப் பின்னர் என்க.
|
|
(விளக்கம்) வயந்தகன் -
இவன் உதயணன் அமைச்சருள் ஒருவன். உதயணன் சிறைக் கோட்டம் புக்கபின்
உதயணனைச் செவ்வி நோக்கிச் சிறை மீட்டுப்போதற் பொருட்டு உஞ்சை
நகரத்திலே வந்து மாறு வேடம் புனைந்துகொண்டு பிரச்சோதன மன்னன்
மக்களுடைய தோழர்களுள் ஒருவன்போன்று உறைபவன். இங்ஙனமே உஞ்சை நகரத்தே
யூகிமுதலியோர் பல்வேறு வடிவங்களோடு கரந்துறைகின்றனர். மாணி -
பிரமசாரி. உஞ்சேனை - உஞ்சை நகரம். தொழுதி - கூட்டம். பாலகுமரன் -
மன்னன் மகன்.மடி - ஆடை. மாணவனாகிய பாலகுமரன் ஆசிரியனாகிய
உதயணகுமரனுக்கு வழங்கும் கையுறைப் பொருள் இவைகள் என்பது தோன்றக்
கையுறைச் செப்பு என்றார். கடிநகர் என்றது உதயணன் மாளிகையை. இவரைப்
பயின்றுழி - இவரோடு பழகியவிடம். இது முன்னிலைப் புறமொழி. வயந்தகன்
நீயிர் கண்டறிவிலீர் எனமொழியால் மறுத்துக் குறிப்பினால் தன்னை
உணர்த்தினான் என்பது கருத்து. இசையாமாக்கள் - ஏதிலார்.
|