உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
இன்றுதலை யாக வென்று
மெம்வயின் இவரே
வருகென வேயின னருளி
மன்ன குமரன் றன்வயிற்
கோடலின்
அரும்பெறற் றோழ னாங்குவந்
தொழுகிப்
பெரும்பெற் றறையும் பேச்சின னாகி 40
மாய யாக்கையொடு மதிலகத்
தொடுங்கிய ஆய
மாக்க ளவன்வயி
னறிந்து காவ லாள
ரற்ற நோக்கி
மேவன மென்னுஞ் சூழ்ச்சிய
ராகிப் பன்னாள்
கழிந்த பின்னர் முன்னாள்
|
|
(இதுவுமது) 35 - 44:
இன்றுதலையாக..........கழித்தபின்னர்
|
|
(பொழிப்புரை) உதயணகுமரன்
அவ்வயந்தகனையே ஏவி 'இற்றைநாள் முதலாக நாள்தோறும் இப்பணியாளரே வருமாறு
செய்க' என்னும் செய்தியை மன்னவன் மகனாகிய பாலகுமரனுக்கு அறிவித்து
அவன் உடன்பாட்டையும் பெற்றுக் கொண்டமையாலே, அரும்பெறல்
நண்பனாகிய வயந்தகன் நாடோறும் உதயணன்பால் வந்துவந்து மீள்வானாகி
அவ்வரண்மனை யகத்தே தான் ஒற்றியறியும் பெரிய செய்திகளை உதயணனுக்குக்
கூறாநின்றான். மேலும் வேற்றுருவங் கொண்டு அவ்வரண்மனையின் அகத்தே
மறைந்துறையும் யூகி முதலிய உதயணன் கூட்டத் தினரும் அவ்வயந்தகன்பால் அறிய
வேண்டும் செய்திகளை அறிந்துகொண்டு அனைவரும் ஆங்குள்ள காவலரின்
சோர்வாகிய செவ்வியை எதிர்பார்த்து அங்ஙனம் ஒரு செவ்வி கிடைத்துழி
யாமெல்லாம் உதயணனோடு இந்நகரினின்றும் தப்பி நம்நகரை யடைவோம்
என்னும் முடிவினையுடையராகி அச்செவ்விக்காகப் பலநாள் கழிப்பாராயினர்.
இங்ஙனம் கழித்த பின்னர் என்க.
|
|
(விளக்கம்) வயந்தகன்பாலே
அச்செய்தியைக் கூறி அவனை ஏவி என்க. மன்னகுமரன் - பாலகுமரன். கோடலின்
- அவன் உடம்பாடு கோடலின் என்க. 'செயற்கரிய யாவுள நட்பின்' என்பது
பற்றி அரும் பெறற்றோழன் என்றார். பெற்று - தமக்கு ஆக்கந்தருஞ்
செய்தி. மாய யாக்கை - பொய்வேடம். ஆயம் - கூட்டம். மேவனம் -
செல்வேம். சூழ்ச்சி : ஆகு பெயர்.
|