உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
          உயலருந் துன்பமொ டொருவழிப் பழகிப்
     55   பயலை கொண்டவென் பையு ளாக்கை
          பண்டென் வண்ணம் பயின்றறி மாக்கள்
          இன்றென் வண்ண மிடைதெரிந் தெண்ணி
          நுண்ணிதி னோக்கி நோய்முத னாடிற்
          பின்னிது காக்கும் பெற்றி யரிதென
     60   மலரே ருண்கண் மாதர்க் கமைந்த
          அலரவண் புதைக்கு மருமறை நாடித்
 
           (உதயணன் எண்ணுதல்)
           54 - 61: உயலரும்..........நாடி
 
(பொழிப்புரை) உய்ந்து கரையேறுதற்கரிய பெருந்துன்பத்தோடு மட்டுமே பழகிப் பழகிப் பசலை பாய்ந்தமையாலே நலிந்த என் உடலை இங்ஙனம் வேறுபடுதற்கு முன்னர் என்னோடு பயின்று அறிந்தவர்கள் அந்நிலைக்கும் இற்றை நாள் என்னிலைக்கும் வேற்றுமை தெரிந்து நினைத்துப் பார்த்துக் கூர்ந்து நோக்கி இந்நோய்க்குக் காரணம் யாதென ஆராய்வாராயின் பின்னர் இது வாசவதத்தையால் உண்டான வேறுபாடு என்னும் உண்மையை அவர் அறியாமல் மறைக்கும் தன்மை அரியதொன்றாகும். மறைக்கவியலாதபொழுது குவளைமலர் போன்ற மையுண்ட கரிய விழிகளையுடைய வாசவதத்தையைப் பற்றி ஊரில் அலர் எழுதல் ஒருதலை. அங்ஙனம் அலர் எழாமல் பாதுகாத்து மறைத்தற்குரிய அரிய உபாயத்தைக் காண வேண்டும் என்று நினைத்து என்க.
 
(விளக்கம்) இன்பமுந்துன்பமும் மாறி வருமியல்புடைய இவ்வுலகத்தே எனக்குத் துன்பம் ஒன்றும் இடையறாது வருகின்றது என்றிரங்குவான் உயலருந்துன்பமொ டொருவழிப் பழகி என்றான்.

    பயலை கொண்ட என்பையுள் யாக்கை என்றது, பசலை பாய்தல் என்னும் மெய்ப்பாடு. பையுள் - துன்பம். இது - இந்த மறை. அலர் - ஊரவர் கூறும் பழமொழி. நோய்முத னாடுவோர் இஃது இவன் வாசவதத்தையைக் காமுறுதலானே உண்டாயிற்று என்பர். இதனால் அவட்குப் பழிச்சொல் பிறக்கும் என்றவாறு.