உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
                  
          தெரிவுறு சூழ்ச்சியு ளிருவரு மெண்ணிப்
          பிறன்பாற் பட்ட பெண்பா னாடி
          அவள்பாற் பட்ட வார்வஞ் செய்கம்
     65   அன்னா ளொருத்தியை யறிந்தனை வம்மெனப்
 
           (உதயணனும் வயந்தகனும் உபாயம் காணல்)
               62 - 65: தெரிவுறு..........வம்மென
 
(பொழிப்புரை) உதயணனும் வயந்தகனும் ஆகிய இருவரும் தனித்திருந்து உபாயந் தெரிதற்கமைந்த ஆராய்ச்சியின்கண் நெடிது நினைத்து இவ்வலர் எழாமற் பாதுகாத்தற் பொருட்டுப் பிறன் ஒருவன்பாற் கன்றிய காமமுடையாளாய பரத்தை யொருத்தியைக் கண்டு அவள்பால் யாம் பெரிதும் காமவிருப்பம் உடையேம் போன்று பொய்யாக நடிப்பேம் என்று துணிந்து உதயணன் அத்தகைய பரத்தை யொருத்தியைத் தேடிக் கண்டு வருவாயாக என்று வயந்தகனை ஏவா நிற்ப என்க..
 
(விளக்கம்) உபாயம் - தெரிதற்கமைந்த சூழ்ச்சி என்க. இருவரும் - உதயணனும் வயந்தகனும் என்க. பிறன்பாற்பட்ட பெண்பால் என்றது, பரத்தையரியல்புக்கு மாறாகப் பிறன் ஒருவனையே காமுற்று ஏனையோரை வெறுக்கும் பரத்தை என்றவாறு. ஆர்வஞ் செய்கம் என்றது ஆர்வமுடையேம் போன்று நடிப்போம் என்றவாறு. அங்ஙனம் நடித்துழி இவன் உடல்மெலிவிற்குக் காரணம் அப்பரத்தையே என்று உலகம் நினைக்கும் இவ்வாற்றால் வாசவதத்தைக்குப் பழியுண்டாகாமல் மறைத்தல் கூடும் என்பது கருத்தென்க.