(விளக்கம்) பல்வேல்
சுற்றம் புடைசூழ என ஒரு சொல் வருவிக்க. யாவரேயாயினும்
அன்றைவைகல் சென்றோர்ப் பேணிப் பள்ளி மருங்கிற் படிறின்று ஒழுகுதலே
பரத்தை மகளிர்க்கு அறமாம். அங்ஙனமின்றி ஒருவன் பாங்கர் உளம்வைத்
தொழுகுதல் அவர்க்கு அதர்மம் என்பது கருத்து. இதனை,
"நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தங் குடியிற் பிறந்தா ளல்லள் ஆடவர்
காண நல்லரங் கேறி யாடலும் பாடலும் அழகுங் காட்டி
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்கும்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற்
றுறக்குங் கொண்டி மகளிர்"
..........
எனவரும் சித்திராபதி கூற்றினும் (மணிமே - 18 : 10 - 4) காண்க.
அரங்கியன் மகளிர் - விறலியர். தலைக்கோல் - ஒரு பட்டம். இப்பழி
படுதுணை யொழுகுவாள் நருமதை என்னும் பாவையாகும் என மாறுக. தவ்வையாகிய
ஒருத்தியும் என்க. ஒருமகள் - ஒருத்தி. பாவை என்றது - பரத்தை
என்னுமாத்திரையாய் நின்றது.
|