உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           செந்நூ னிணந்த சித்திரக் கம்மத்து
           வெண்கா லமளி விருப்பி னேற்றி
     100   அணியிழை மகளிரும் யானையும் வணக்கும்
           மணியொலி வீணையுஞ் சாபமு மரீஇக்
           கழறொடி கவைஇய கலம்பொழி தடக்கை
           உதயண குமர னுள்ளத் துளளெனின்
           ஒண்டொடி மாதரு மொருதுணை யோருட்
     105    பெண்டுணை சான்ற பெருமைபெற் றனளென்
           மருமகற் புகலு மனம்புரி கொள்கை
           இருமூ தாட்டி யெனக்கு முண்டெனத்
           தூண்டி லிரையிற் றுடக்குள் ளுறுத்துத்
           தேன்றோய்த் தன்ன தீஞ்சொ லளைஇப்
     110    பொருளெனக் கருதிப் பொன்னிவண் விடுத்தோன்
           அருளியு மருளா னடித்தி மாட்டெனக்
 
         (தாய் வயந்தகனை முகமன் கூறி உபசரித்தல்)
          98 - 111: செந்நூல்..........அடித்தி மாட்டென
 
(பொழிப்புரை) அவ்வாறு புகுந்த வயந்தகனைக் கண்டுழிப் பெரு மூதாட்டியாகிய அத்தாய்க்கிழவி அவனை இன்முகம் காட்டி வரவேற்றுச் சிவந்த நூலாற் பின்னப்பட்டுச் சித்திரத்தொழிலையும் யானை மருப்பாலியற்றிய வெள்ளிய கால்களையும் உடைய கட்டிலின்மேல் இருத்தி, "ஐய! அழகிய அணிகலன்களையுடைய பெண்டிரையும் மதங்கொண்ட யானையையும் மனங்கவர்ந்து ஒரு சேர வணங்கச் செய்கின்ற அழகிய ஒளியையுடைய வீணையும் வில்லும் பழகிய உழலும் தொடியணிந்த இரவலர்க்கு அருங்கலம் வழங்கும் வள்ளன்மையுடைய பெரிய கையையுடைய உதயணகுமரனுடைய திருவுள்ளத்தே புகுந்துறைவாள் என்னின் ஒள்ளிய தொடியணிந்த காதற் பண்புமிக்க என்மகள் நருமதை தானும், ஒப்பற்ற தலைவரைப்பெற்ற மகளிருள் வைத்துப் பெண்மைத் தன்மையின் அளவுமிக்கதொரு சிறப்பை அடைந்தேவிட்டாள் என்பதில் ஐயமில்லை; மேலும் ஒப்பற்ற இத்தகைய ம ருமகனைப் பெறல்வேண்டும் என்னும் என் மனத்திற்கு விருப்பமானதொரு கொள்கை எனக்கும் உளதுகாண்" என்று, தூண்டிலின்கண் கோக்கப்படுகின்ற இரையைப்போன்று கேட்டோரைப் பிணிக்கும் கருத்தை உள்ளே யடக்கித் தேனில் தோய்த்தாற் போன்று இனிக்கின்ற மொழிகளாலே அளவளாவிப் பின்னரும் "ஐய, எளியேமாகிய எம்மையும் ஒருபொருள் என்று மதித்து எமக்குப் பொன்னும் விடுத்த அவ்வத்தவர் பெருமான் அடித்தியாகிய நருமதையின்பால் இங்ஙனம் அருள்செய்தானேனும் மற்றொருவகையான் நோக்குழி அருள்செய்தான் அல்லனுமாகின்றான் கண்டீர் என வித்தகமாகக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஈண்டு இத்தாயின் மொழி பன்முறையும் ஓதிஓதி உவக்குந் தன்மையுடையனவாதல் காண்க. செந்நூல் - சிவந்த பட்டுநூல் என்க. சித்திரக்கம்மம் - சித்திரத் தொழில். வெண்கால் - யானை மருப்பாலியன்ற கால்கள். மணி யொலி - அழகிய வொலி. சாபம் - வில். கழல் தொடி - உழலும் தொடி. கலம் - அணிகலம். இரவலர்க்குக் கலம் பொழி தடக்கை என்க. ஒண்டொடிமாதர் என்றது, நருமதையை. ஒருதுணையோர் - ஒப்பற்ற தலைவரைப் பெற்றமையாற் சிறப் பெய்திய மகளிர.் பெண் - பெண்மைத்தன்மை. என் மனம் புரிகொள்கை மருமகற்புகலும் கொள்கை எனத் தனித்தனி கூட்டுக. துடக்கு - பிணித்தற் கருவி. பொன்விடுத்தமையால் அருளினான்; எம்மில்லிற்குத்தானே வாராமையால் அருளான் என்பது கருத்து.