உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           ஆங்கினி திருந்த போழ்திற் பூங்குழை
           காமுறப் பட்ட சேணிகச் சிறுதொழில்
           கற்றது மில்லாச் சிற்றறி வாளன்
           பொய்யொடு மிடைந்த பொருணசைக் கடுஞ்சொல்
     120    மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்
           திளையோர் வைகா விழுக்கரு வாழ்க்கையன்
           கவறா டாளர்க்குக் கலந்தொலை வெய்திக்
           கொடையகத் தோனெனக் கடைகழிந் தோடிக்
           கவலையிற் செல்லுங் கவ்வையின் விலக்கி
     125    ஐயன் வந்த வாசறு கருமம்
           கைவளை மாதர் களைந்துசென் றீயென
 
             (தாய் நருமதைக்குக் கூறுதல்)
          116 - 126: பூங்குழை............சென்றீயென
 
(பொழிப்புரை) அழகிய குழையை யணிந்த நருமதை தன்னாற் காமுறப்பட்ட நெய்தற் றொழிலாகிய சிறிய தொழில் செய்வோர் குடியிற் பிறந்தவனும், அத்தொழிலையேனும் பிறவற்றையேனும் சிறிதும் கற்றிலாதவனும், சிறுமதியுடையோனும், பொருளாசை காரணமாக எப்பொழுதும் பொய்ம்மொழி விரவிய கடிய மொழியையே பேசும் வழக்கமுடையவனும், அழுக்குடைய கரிய ஆடையையே விரும்பி யுடுப்பவனும், இளமையுடைய மகளிர் நொடிப் பொழுதும் கூடியிருத்தற்கு உடன்படாத இழிதகவுடையோனும், (விழுக்கரு?) துன்புறு வாழ்க்கையை உடையவனும் ஆகிய கயவன் (கொடையகத்தோன்) சூதாடுவோர்பால் நின் அணிகலங்களைத் தோற்றுவிட்டு நின் வாயிலின்கண் வந்து நிற்கின்றான் எனப் பிறர் கூறக்கேட்டு அவன்பாற் கன்றிய காமமுடையாளாதலின் அவனை அந்நிலையினும் காணப்பெரிதும் விரும்பி விரைந்துஓடித் தன் மாளிகை வாயிலையடைந்து ஆங்கு அவனைக் காணாமையால் பின்னும் அவனைத் தேட நினைந்து நாற்சந்தி கூடுமிடத்திற்குச் செல்வாளை, தாய்க்கிழவி எதிர் சென்று துன்பத்தோடு தடுத்து நிறுத்தி, ஏடி! கைவளையணிந்த மாதராய்! நினக்குப் பரிசம் வேண்டுவன கொணர்ந்துள்ள இத்தலைமகன் வந்த குற்றமற்ற காரியத்தை முடித்தபின்னர் உன்விருப்பம்போற் செல்வாயாக! என்றுகூறி என்க.
 
(விளக்கம்) இப்பகுதியில் (121) 'விழுக்கரு வாழ்க்கையின்' (123) 'கொடையகத் தோனென' எனவரும் தொடர்கட்குப் பொருள் நன்கு புலப்படவில்லை. இவை, இழுக்குறு வாழ்க்கையன் என்றும் கடையகத்தோன் என்று மிருந்த பாடங்களின் திரிபுகள் என்று தோன்றுகின்றன. இப்பகுதியாற் கூறப்பட்ட பொருளின் சுருக்கம் வருமாறு :-- வயந்தகனும் தாயும் அளவளாயிருந்த பொழுது, நருமதையாற் காதலிக்கப்பட்ட சேணிகனாகிய கயவன் சூதாடுகளத்தின்கண் நருமதை வழங்கிய அணிகலன்களைத் தோற்று விட்டு அவள் மாளிகைவாயிலை அடைந்தானாக அதுகண்ட சிலர் அவள்பாற் அவள் பின்னரும் அவன்பாற் பெரிதும் விருப்பமுடையவளாய் அவனைத் தொடர்ந்து போகத் தலைப்படுவாளாயினள் என்பதும் அதுகண்ட தாய் மனம் வருந்தி அவளைத் தடுத்து வயந்தகன் வரவையும் உதயணன் காதலையும் கூறி உதயணன் வேண்டுகோட் கிணங்கும்படி வேண்டுவாளாயினள் என்பதுமாம்.

    இந்நிகழ்ச்சியாற் 'காமத்திற்கு கண்ணில்லை' என்னும் ஓர் இழி தகைமையை நமக்கு விளக்குகின்றார் என்க.

    பூங்குழை : அன்மொழி. நருமதை - சேணிகச் சிறுதொழில் ...... வாழ்க்கையன் என்னும் துணையும் அக்கயவன் இயல்பு கூறிய படியாம். கவறாடாளர்க்குக் கலந்தொலைவெய்திக் கடையகத்தான் என்பது கண்டோர் கூற்றென்க. கடை - வாயில். கவலை - நாற்சந்தி. கடைகழிந்து ஆங்குக் காணாமையால் ஓடிக் கவலையிற் செல்லும் என்பது கருத்தாகக்கொள்க.

    கவ்வை - துன்பம். ஐயன் - வயந்தகன். ஐயன் காரியமாகிய குறைகளைந்து என்றவாறு. சென்றீ - செல்வாயாக. கைவளை மாதர் என்றது இகழ்ச்சி வகையாக விளித்தபடியாம். ஏடி வளையற்காரி! நான் கூறுவது கேள்! என்றார்போல வென்க.