உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
தாயப் பெண்டிருந் தந்துணை யோருமென்
135 றோரி லெழுகிளை யுடன்றொக்
கீண்டிப்
பழமையிற் பசையாது கிழமையிற்
கெழுவாது
தவந்தீர் மருங்கீற் றிருமகள்
போலப்
பயந்தீர் மருங்கிற் பற்றுவிட்
டொரீஇ
இட்டதை யுண்ணு நீலம் போல 140
ஒட்டிடத் தொட்டு முறுதி
வாழ்க்கையுட்
பத்திமை கொள்ளார் பைந்தொடி
கேளென
எடுத்தியல் கிளவியோ டேதுக் காட்டித்
|
|
(சுற்றத்தார் நருமதைக்கு
அறிவுரை
கூறுதல்)
134 - 142: தாய..........காட்டி்
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட ஒரே
குடியிற்றோன்றிய தாயத்தாராகிய
மகளிரும் உறவினராகித் தன்னோடொத்த
அகவையுடைய மகளிரும் ஆகிய கணிகையர் ஒருங்கே குழுமி நருமதையைச்
சூழ்ந்துகொண்டு 'பசிய தொடியினையுடைய நருமதாய்! நம் போன்ற கணிகை மகளிர்
தன்பால் விரவிய வேறு நிறத்தை இல்லையாக்கித் தான் ஒட்டிய இடத்தே
உறுதியாக ஒட்டி நிற்கும் நிறம்போன்று தாம் ஊழ்வயத்தானே பொருந்திய
ஒருவன்பாலே நெஞ்சு பொருந்திநிற்கும் உறுதியுடைய குலமகளிர்
வாழ்க்கையின்கண் பற்றுதல் செய்யார்க்காண்! இனி அக்கணிகையர்தாம்
இவர் நமக்குப் பழைமையுடையார் என அவர்பால் பற்றுடையர் ஆகாமலும்
இவர்க்கேயாம் என்றும் உரிமையுடையேம் என்று அவ்வுரிமையிலே
பொருந்தாமலும், முன்னைத் தவப்பயன் தீர்ந்தவிடத்தே திருமகள் பற்றின்றி
நீங்குமாறு கைப்பொருளாகிய பயன் இல்லையானவிடத்தே சிறிதும் பற்றின்றி
நீங்கிப் போவர்காண்!' என்று எடுத்துக்காட்டு மொழிகளோடே
காரணங்களையும் கூறிக்காட்டி என்க.
|
|
(விளக்கம்) ஓர் இல்
எழுகிளைத் தாயப்பெண்டிரும் என மாறிக்கூட்டுக. இனி ஓர் இல்லத்தார்க்குரிய
ஏழுவகை உறவு உளவாயின் அங்ஙனமே கொள்க. தந்துணையோர் - தன்னோடொத்த
அகவையுடையோர். ஒரீஇப் போவர் என ஒருசொல் வருவித்தோதுக.
இட்டதையுண்ணும் நீலம் என்புழி இட்டதையுண்ணும் என்றது வாளா
அடைமாத்திரையாய் நின்றது. நீலநிறம் தான் ஒட்டிடத்து உறுதியாக ஒட்டுதல்
போன்று குலமகளிரும் தாம் மனம் பொருந்திய விடத்தே உறுதியாக நிற்பர்
என்றபடியாம். பத்திமை - பற்று. எடுத்தியல்கிளவி - உதாரணங் காட்டும்
சொல். ஏதுக் கிளவி எனவும் கூறிக்கொள்க. ஏது - காரணம்.
|