உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
          தொடிக்கேழ் முன்கைத் தொகுவிரன் மடக்கி
           மாநிதி வழங்கு மன்னரிற் பிறந்து
     145    ..........வேண்டியது முடிக்கும்
           கால மிதுவெனக் காரணங் காட்டும்
           ஆர்வச் சுற்றத் தவர்வரை நில்லாள்
           தாய்கை விதிர்ப்பத் தலைபுடைத் திரங்கி
           ஏயது மறுக்கலு மிருந்தோற் கூய்நின்
     150    அடியரிற் பற்றி யாணையிற் கொள்கெனக்
           கடிதியல் வையங் கவ்வையி னேற்றிக்்
           கொடியணி கூலங் கொண்டனன் போவுழி
 
             (வயந்தகன் நருமதையை வலிந்து கொடுபோதல்
                   143 - 152: தொடி..........போவுழி
 
(பொழிப்புரை) பினனரும் நருமதை உதயணனை விரும்ப வேண்டும் என்பதற்கு உரிய காரணங்களை நிரலே எண்ணிக்காட்டக் கருதித் தம் வளையலையும் நன்னிறத்தையும் உடைய முன்கையவாகிய தொகுதியுடைய விரல்களை ஒன்றொன்றாக மடக்கி "நருமதாய் நீதான் விரும்பியவற்றையெல்லாம் விரும்பியபடியே .நிறைவேற்றிக் கொள்ளற்குரிய நற்காலமாம் இஃது எற்றாலெனின் நின்னை விரும்புகின்ற உதயணகுமரன் மிகப் பெரிய பொருளையும் எளிதாக வழங்குதற்குரிய சிறந்த மன்னர் குடியிற் பிறந்து..........எனக் காரணங்காட்டா நிற்கும் தன்பால் ஆர்வமுடைய அச்சுற்றத்தார் கூறும் அறிவுரை எல்லையின்கண் நில்லாளாய்த் தன் தாய் கைவிதிர்த்துக் கலங்கும்படி தன் தலையிலடித்துக்கொண்டு அத்தாய்ப்பணியை மறுத்தலும் அதுகண்ட தாய் தன் மாளிகைக்கண் வீற்றிருந்த வயந்தகனைக் கூவி யழைத்து ஐய! இவளை நீ நின் ஏவலாளரால் பற்றுவித்துக் கொண்டு கட்டளை முறையாலே கொண்டு போவாயாக! என்று கூற, அதுகேட்ட வயந்தகனும் அங்ஙனமே அவளைப் பற்றிக் கொணர்மின்! என ஏவலர்க்குக் கட்டளையிட்டுப் பற்றுவித்து விரைந்துசெல்லும் ஒரு தேரின்கண் ஆரவாரத்தோடு ஏற்றிக் கொண்டு கொடிகள் அழகுசெய்யா நின்ற கடைத்தெரு வழியாகச் செல்கின்றபொழுது என்க.
 
(விளக்கம்) தொடியும் கேழும் உடைய கை யென்க. கேழ் - நிறம். தொகுவிரல்: வினைத்தொகை. காரணங்களை எண்ணிக்காட்ட விரலை மடக்கி என்பது கருத்து. முடித்தற்குரிய ஆகூழ் நிகழுங்காலம் இஃதாம் என்றவாறு. வரை - எல்லை, தாய் துன்பத்தாலே கைவிதிர்ப்ப அதற்கெதிராகத் தன் தலையிலடித்துக்கொண்டு ஏயது மறுப்ப என்க. ஏயது - ஏவிய கருமம். அஃதாவது 'ஐயன் வந்த ஆசறு கருமம் களை' என்று முன் தாய் ஏவியதென்க. ஆணை - கட்டளை. கூலம் - கடைத்தெரு.