உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
     165    ஆற்றற் கொற்றமொ டரசுவழி வந்ததன்
           காத்துயர் தொல்குடிக் கதுவா யாகப்
           பண்பில் சிறுதொழில் பயின்றதை யன்றியும்
           தன்னோடு படாளைத் தானயந் தரற்றிக்
           கண்ணற் றனனாற் காவலன் மகனென
     170    அண்ணன் மருங்கி னறிவிழிப் போரும்
 
                 (இதுவுமது)
        165 - 170: ஆற்றல்..........அறிவிழிப்போரும்
 
(பொழிப்புரை) மன்னன் மகனாகிய உதயணன் பேராற்றலாற் றோன்றிய வெற்றிச் சிறப்போடு சிறந்த அரசர் மரபின் வழியாக வந்ததும் அவ்வரசராற் பாதுகாக்கப்பட்டு உயர்ந்ததுமாகிய தனது பழங்குடிக்கு ஒரு பழியுண்டாகும்படி முன்னரே தன்னோடொத்த மற்றொரு மன்னன் ஏவிய பண்பற்ற சிறுதொழிலைச் செய்ததுமன்றியும், தன்னை விரும்பாத ஒரு கணிகை மகளைத் தான் பெரிதும் விரும்பி அரற்றுவதோடமையாது, கண்ணோட்ட மில்லாத இவ்விழி செயலையும் துணிந்து செய்கின்றனன் கண்டீர்! என்றும் நம்பியாகிய உதயணன் திறத்திலே அவனுடைய அறிவினைப் பழிப்போரும் ஆகி என்க.
 
(விளக்கம்) ஆற்றல் - வலிமை. கொற்றம் - வெற்றி. தன் தொல் குடி என மாறுக. பண்பில் சிறுதொழில் என்றது வாசவதத்தைக்கு யாழ் பயிற்றல். அத்தொழில் தன்னளவிற் சிறப்புடையதே யாயினும் மாற்றான் ஏவிய தொழிலாதலின் பண்பில் சிறுதொழில் என அப்பட்டி மாக்கள் கூறுகின்றனர். கண் - கண்ணோட்டம், அறிவுமாம். காவலன் மகன் என்றது இகழ்ச்சி. கதுவாய் - குற்றம். பயின்றதை - ஐகாரம்: சாரியை.