உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
பூந்துகிற் றானை பற்றிக்
காய்ந்தது
காட்டினை சென்மோ மீட்டின
தெளிகெனப்
படிற்றியல் களைஇப் பணிமொழிக் கிளவி
205 நடுக்குறு துயரமொடு நயவரப்
பயிற்றிக்
குவிப்பூங் கையிணை கூப்பித்
திருக்குழல்
நானப் பங்கி கரமிசைத்
திவளப்
பரட்டசை கிண்கிணிப் பக்கம்
புல்லி
அரத்தகத் தீரத் தைதுகொண் டெழுதிய
210 சீறடிச் சுவட்டெழுத் தேறிய சென்னியர்
|
|
(தலைவர் ஊடல்
உணர்த்துதல்)
202 - 210: பூந்துகில்.......சென்னியர்
|
|
(பொழிப்புரை) தலைவராகிய அந்நகர
நம்பியர் (219) இவ்வாறு தம்பால் தவறில்லையாகவும் ஊடல்கொண்டு தம்மைப்
புறக்கணித்து ஒருசார் செல்லத் தொடங்கும் அம்மகளிருடைய
அழகிய ஆடையின் முன்றானையைக் கையாற்பற்றி அவரை நிறுத்தி ''ஏடி! எம்மைச்
சினந்ததற்குரிய காரணந்தான் யாது? அதனை எமக்கு எடுத்துக் கூறிய பின்னர்ச்
செல்வாயாக! என்று இரந்து பின்னரும் யாங் கூறுகின்ற இம் மொழிகளையும்
கேட்டுப் பின்னர் யாம் தவறுடையே மல்லேம் என்பதனை நன்குதெளிந்து
கொள்வாயாக என்று இன்னோரன்ன வஞ்சகப் பண்பு களைந்த
தம்முடைய பணிவைப் புலப்படுத்தும் மொழியாகிய இனிய சொற்களை
அக்கணிகைமார்க்குத் தம்பால் விருப்பம் வருமாறு தாம் மனம் நடுங்கும்
துன்பந் தோன்றும்படி பலகாலும் கூறியும், அவர் சினமகலாமை கண்டு பின்னரும்
தம்முடைய அழகிய குழற்சியையுடைய நறுமணங் கமழும் குடுமி தங்கள் கைகளின்
மேல் தவழும்படி அழகிய கூம்பிய விரல்களை யுடைய கைகளைக்
கூப்பித் தொழுது அம்மகளிருடைய பாட்டின்கட் கட்டிய கிண்கிணி
மருங்கே வீழ்ந்து அவர் தம் சிற்றடிகளைப் பற்றிக் கோடலால் அம்மகளிர்
பின்னும் சினந்து அத்தலைவர் முடியின்கண் உதைத்தலானே, அம்மகளிர்
சிற்றடிகளிலே செம்பஞ்சுக் குழம்பினாலே மெல்லிய எழுதுகோல் கொண்டு
எழுதப் பட்ட கோலமாகிய எழுத்துக்கள் பதியப்பட்ட
முடியினையுடையராய் என்க.
|
|
(விளக்கம்) காய்ந்தது - காய்ந்ததற்குரிய காரணம். சென்மோ - மோ : முன்னிலையசை.
இன - இம்மொழிகள். படிறு - வஞ்சம். பணிமொழி - பணிவைப் புலப்படுத்தும்
மொழி. நகரநம்பியார் கூற்றினுள் ஒருவன் கூற்றை மட்டும் ஈண்டு
எடுத்துக் காட்டுகின்றார். ஆதலின் காட்டினை சென்மோ என்று ஒருமையாற்
கூறுகின்றார். இன்னோரன்ன பணிமொழி கூறி என்பது கருத்தாகலான் ஒருமை
பன்மை மயங்கின அல்ல. குழல் - குழற்சி. பங்கி - குடுமி. தங்குடுமி
இருபக்கத்தும் சரிந்து கிடத்தலாற் கைகூப்புங்கால் அக்கைமிசை
திவள்வதாயிற்று என்க. அசை கிண்கிணி - கட்டிய கிணிகிணி. புல்லி -
பற்றி. அரத்தகத்து ஈரம் - செம்பஞ்சுக் குழம்பு. ஐது : ஆகுபெயர்.
எடுத்துச் சுவடு ஏறிய சென்னியர் என மாறுக.
|