உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           நாட்போது நயந்த வேட்கைய வாயினும்
           முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத்
           தகைப்பருங் காமத்துத் தாம்வீழ் மகளிர்
           நகைப்பதம் பார்க்கு நனிநா கரிகத்துச்
     215    சொல்லி னுண்பொருள் காட்டி யில்லின்
           படுகாழ்ப் படுத்துத் தேய்வை யுறீஇக்
           கலுழி நீக்குங் கம்மியர் போல
           மகர வீணையின் மனமாசு கழீஇ
           நகர நம்பியர் திரிதரு மறுகின்
 
                (இதுவுமது)
        211 -219: நாட்போது.........மறுகின்
 
(பொழிப்புரை) அன்று அலர்ந்த புதுமலரின் தேனையுண்டற்கே பெரிதும் அவாவுடையவேனும் தானே மலராத பேரரும் பினையும் கிண்டி அதன்கண் அமைந்த இளந்தேனையும் சுவைத்துப் பார்க்கும் வண்டுகள் போன்று தடுத்தற்கரிய காமத்தோடு தாம் தாம் விரும்புகின்ற மகளிரின் ஊடலாகிய மனக்குறையை, மகர வீணையை இயக்கித் தாம் வாசிக்கும் பண்ணின்கண் அமைந்த சொற்களினுடைய நுண்பொருள் தாமும் கேட்போர்க்கு இசையின் கண்ணே புலப்படுமாறு வாசித்துக்காட்டி நீரின்கட் கலந்துள்ள அழுக்கினைத் தேற்றாங் கொட்டையை அந்நீரிலிட்டுத் தேய்த்து நீக்கி நன்கு தெளிவிக்கின்ற தொழிலாளர் போன்று அவர்தம் மனக்குற்றத்தைப் போக்கி அவர் ஊடல் தீர்ந்து பூக்கும் புன்முறுவலானே அவருடைய கூடற் குறிப்பினைக் கண்டு மகிழும் இயல்புடைய மிக்க நாகரிகத்தையுடைய நகரப் பெருங்குடி மக்கள் திரிதருகின்ற வீதியின்கண் என்க.
 
(விளக்கம்) நகரநம்பியர் (219) நலம் கரியப் பற்றிச் சென்மோ இன தெளிகெனக் களைஇப் பயிற்றிப் புல்லிச் சென்னியராய்ப் பின்னும் வீணையின்கண் காட்டி மாசு கழீஇத் திரிதரும் மறுகின்கண் என இயைபு காண்க. நகரநம்பியர் பூங்குழை மகளிர் மனமாசு கழீஇத் திரிதரும் மறுகின் என அனைத்தையும் மறுகிற்கே அடையாக்குக.

    நாட்போது - அன்றலர்ந்த மலர். முகை - அரும்பு. பதம் - சுவை. நகைப்பதம் - நகையையுடைய கூடற் செவ்வி. பண்ணின்கண் அமைந்த சொல்லின் நுண்பொருளும் தோன்ற இசையிற்காட்டி என்க. மனமாசு - மனக்குறை,

    இல் - தேற்றாமரம். படுகாழ் - முற்றிய விதை. தேய்வை யுறீஇ - ஒரு சொல்; தேய்த்து என்க. கலுழி - கலங்கல்.