உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
220
ஆணையிற் கொண்டுதன் னரசியல்
செய்தோன்
காம விருந்தினன் கலையிற்
கிகந்தனன்
பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர்
மாட்டென
உரைத்தகு கிளவி யோம்பார்
பயிற்றி
நடநவின் மகளிர் நலத்திடை நம்பி
225 விருந்தினன் போன்மெனப் புரிந்தலர்
தூற்றி
விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்பத்
|
|
(இதுவுமது) 220 - 226:
ஆ..........உரைப்ப
|
|
(பொழிப்புரை) விடரும்
தூர்த்தரும் ஆகிய கயமாக்கள், இவ்வாறு நருமதையைப் பற்றி வரும்படி
கட்டளையிட்டு அவளைக் பற்றிக் கொடு மாற்றான் நாட்டின் கண்ணும் தனது
அரசியல் செயலை அஞ்சாது செய்த உதயணகுமரன் காமவின்பத்தைப்
பண்டு நுகர்ந்தறியாப் புதுவோன்போலும் ஆதலாற்றான், அக்காமக் கலையின்
வரையறையைக் கடவா நின்றான். இத்தகையோன் குலமகளிர்பாலும் ஒரோவழிப்
பிழை செய்தலும் கூடும் எனத் தாம் உரைக்கத் தகுந்த சொல் இஃதெனவும்
அன்றெனவும் ஆராய்ந்து நாவினை அடக்காதவராய்ப் பலகாலும் கூறியும்
கூத்தியர் பெண்மை நலத்தை நுகர்தலினும் இப்பெருமகன் புதியவனே போலும்
எனவும் பழி தூற்றுதலைப் பெரிதும் விரும்பி இகழ்ச்சிச் சொற்களைக்
கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) (175)
வயந்தகன் கேட்ப, (219) மறுகின்கண் விடருந் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப
என இயைபு காண்க. தன் அரசியலின்கண் செய்வதுபோல இந்நாட்டினும் செய்தோன்
என்றவாறு. மாற்றான் நாட்டினும் தனது அரசத் தன்மையைக்
காட்டினான் என்பது கருத்து. காம விருந்தினன் - காமநுகர்ச்சிக்குப்
புதியவன். தம்மை விரும்பு மகளிரைத் தாம் விரும்புவதே இன்பக்கலைக்கு ஒத்த
செயலாம். ஈண்டு உதயணன் தன்னை விரும்பாதவளையும் விரும்புகின்றான்.
ஆதலின் இவன் அவ்வின்பக் கலையையும் அறியாதவன் என்று இகழ்வார்
கலையிற்கு இகந்தனன் என்றார். கலை என்றது ஈண்டு இன்பநூற் கலைகளை என்க.
இங்ஙனம் கலைநலந் தேறாக் காமுகனாயிருத்தலான் இவன் குலமகளிர்பாலும்
பிழை செய்தல் கூடும் என்க. இஃது இவன் வாசவதத்தைக்கு
யாழாசிரியனாகி அவளுடன் பழகுவதனால் அவளையும் இவன் காமுற்றுப் பிழை
செய்தல் ஒருதலை என்னும் தங்கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தியபடியாம்
என்க. அலர்தூற்றுங் கயவர் அச்செயலைப் பெரிதும் விரும்பியே செய்வர்
என்பது தோன்றப் புரிந்து அலர் தூற்றி என்றார். "கயவர் தாங்கேட்ட மறை
பிறர்க்கு உய்த்துரைக்கலான்" என வள்ளுவரும் ஓதுதல் (குறள் - 1076)
காண்க. விடர் - கயவர். தூர்த்தர் - காமுகர். விட்டேறு - பழிச்சொல்.
கல்லெறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் கேட்டோர் மனத்தைப்
புண்படுத்துதலாலே விட்டேறு எனப்பட்டது. விட்டேறு - கல்லெறி.
"விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்" என மணிமேகலையினும் வருதல் (14 -
61) காண்க.
|