உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           தெவ்வ மறைத்தல் வேண்டி வையத்து
           வலிதிற் றந்த வால்வளைப் பணைத்தோள்
           ஒருமனம் புரிந்த நருமதை கேட்ப
           வேட்கைக் கிளவி வெளிப்படப் பயிற்றிச்
     245   சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள்
           நச்சுயிர்ப் பளைஇய நாகம் போல
           அச்சுயிர்ப் பளைஇ யமரா நோக்கமொடு
           சில்லைச் சிறுசொன் மெல்லியன் மிழற்ற
           அவ்விரு ளடக்கி வைகிருட் போக்கிப்
     250   போற்ற மாக்க டூற்றும் பெரும்பழி
           மேற்கொண்ட டனனான் மின்னிழை பொரு   
 
                 (இதுவுமது)
      241 - 251: வையத்து..........பொருட்டென்
 
(பொழிப்புரை) தேரின்கண் ஏற்றி வலிந்து வயந்தகண் கொணர்ந்த வெள்ளிய சங்க வளையல்களையும் மூங்கிலையொத்த தோளையும் உடைய தன்குல வழக்கிற்கு முரணாகச் சேணிகச் சிறு தொழிலாளன் ஒருவன்பாலே மனம் வைத்து அவனைப் பெரிதும் விரும்பிய அந்நருமதை கேட்கும்படி உதயணன் தனது காம வேட்கையைப் புலப்படுத்தா நின்ற மொழிகளை (வஞ்சகமாக)ப் பலகாலும் பேசி அப்பரத்தையின் புன்மைத் தன்மைக்குப் பெரிதும் அயலதாகிய பெருந்தன்மையுடைய அவ்வுதயண மன்னன் மெல்லியலாகிய அவளை அணுகுந்தோறும் அவள் மனம் பொறாதவளாய் நஞ்சுகலந்த மூச்சினையுடைய பாம்புபோல அச்சங்கலந்த பெருமூச்சினையும் பொருந்தாத நோக்கத்தினையும் உடையளாய் இழிந்த சிறுமையுடைய மொழிகளைப் பலகாலும் கூறிப்புலம்பா நிற்க, இங்ஙனமே அற்றை நாள் இரவெல்லாம் தன்னிருக்கையிலேயே அவளை அடக்கி வைத்து அவ்விரவின்கண் வைகறைப் பொழுது வந்தெய்தியவுடன் அவளைத் தேரில் ஏற்றி வயந்தகனுடன் அவள் மனைக்குச் செலுத்தா நின்றான். மின்னுகின்ற அணிகலன்களையுடைய வாசவதத்தைக்குப் பழியுண்டாகாமைப் பொருட்டு இவ்வாறு உதயணன் கயமாக்கள் தன்னைத் தூற்றுதற்குக் காரணமான பெரிய பழியினை மேற்கொள்ளா நின்றனன் என்க.
 
(விளக்கம்) ஒருமனம் - ஒருவனையே காமுறும் மனம். சேட்படு குரிசில் என்றது, நருமதைக்கு மிகவும் அரியவனாகிய உதயணன் என்றவாறு. அச்சுயிர்ப்பு - அஞ்சிவிடுகின்ற பெருமூச்சு. சில்லைச் சிறுசொல் - இழிதகவுடைய கிராமிய மொழிகள். வைகிருன் - வைகறையிருள். மின்னிழை - வாசவதத்தை.

      35. நருமதை சம்பந்தம் முற்றிற்று.
---------------------------------------------------