உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
          காமத் தியற்கை காழ்ப்பட லுணர்ந்து
         நகையு நாணுந் தொகவொருங் கெய்தி
         இழிப்புறு நெஞ்சின னாயினும் யார்கணும்
    10   பழிப்புறஞ் சொல்லாப் பண்பின னாதலின்
         உருவுவழி நில்லா தாயினு மொருவர்க்குத்
         திருவுவழி நிற்குந் திட்ப மாதலிற்
         கேட்டது கரந்து வேட்டது பெருக்கிப்
         பட்டது நாணாது பெட்டது மலையும்
    15   கால மன்மை யல்லது காணிற்
         கோல மன்றோ குமரற் கிதுவென
         எள்ளியு முரையா னிளமைய தியல்பென
         முள்ளெயி றிலங்கு முறுவல னாகித்
 
        ( பிரச்சோதன பெருந்தகைமை )
             7 - 18: காமத்..........ணாகித்
 
(பொழிப்புரை) அதுகேட்ட மன்னவன் உதயணகுமரனது பருவங் காரணமாக அவனது காமப்பண்பு முதிர்வதனை நினைந்து நகையும் நாணமும் ஒருசேர எய்தி உள்ளூர உதயணன் தன் உயர்குடிப் பிறப்பிற்கு ஒவ்வாத சிறுமைத்தொழிலையே மேற்கொண்டனன் என்று அவனை இகழ்கின்ற நெஞ்சையுடையனாயிருந்தும் பிறர்பழி தூற்றாத பெருந்தகைமையை இயல்பாகவே உடையவன் ஆதலின் அவனைப் பிறர் அறியத்தூற்றாதவனாய் இஃது இளமையின் இயல்பு போலும் என்று கருதித்தனது கூர்த்த எயிறு சிறிது விளங்கும்படி புன்முறுவல் பூத்துத் தான் கேட்ட இப்பழியைத் தன் னெஞ்சின்கண்ணேயே மறைத்துக் கொண்டு உதயணகுமரனுக்குத் தான் விரும்பியவற்றை மேற்கொள்ளுதற்குரிய காலம் இஃதன்று என்பதொரு குறையே யல்லது அவன் செயல் அவன் நாட்டில் தக்கதொரு காலத்தே நிகழ்ந்திருப்பின் அதுவும் ஓர் அழகாகவே பிறர் நோக்குமிடத்துத் தோன்றியிருத்தல்கூடும் அன்றோ என அவனுக்கு இரங்கியவனாய் ஆங்குப்பட்ட அப்பழிக்கு நாணுதலை விடுத்து அவன் விரும்பிய இன்பத்தை அவனுக்குப் பெருகச் செய்தற்பொருட்டு உலகின்கண் பரத்தையொருத்தியின் மனம் மற்றோர் ஆடவன்பால் உண்டான அழகினையே பற்றி உறுதி பெறாதாயினும் அவனுடைய செல்வத்தைப்பற்றி உறுதிபெறுதல் இயல்பு என்பதுபற்றி என்க.
 
(விளக்கம்) அரசன் பண்பினன் ஆதலின் எள்ளியும் உரையானாய்க் கேட்டது கரந்து பட்டதற்கு நாணாது குமரற்குக் காலம் அன்மை என்னும் குறையே அன்றி காலமும் இடனும் தக்கனவாயின் இச்செயலும் கோலமன்றோ என இரங்கி இளமையதியல்பு என முறுவலித்து அவன் வேட்ட அவ்வின்பத்தைப் பெருக்க என இயைபு காண்க. பெருக்கி என்பதனைப் பெருக்க எனத் திரித்துக்கொள்க.

    காழ்ப்படல் - முதிர்தல். நகை உதயணன் பேதமைபற்றிப் பிறந்தது. நாணம் பிறர்பழியும் தம் பழிபோற்கொண்டு நாணும் பெருந்தகைமை பற்றிப் பிறந்தது என்க.

    'பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக்    குறைபதி யென்னு முலகு' எனவரும் திருக்குறளும் (1015) நினைக

.

    'பிறர் தீமை சொல்லா நலத்தது' (குறள் 984) என்பது பற்றிப் ''பழிப்புறஞ் சொல்லாப்பண்பினன்'' என்று பாராட்டினர் என்க. பண்பு, ஈண்டுச் சால்புடைமை மேனின்றது. வேட்டது பெருக்க என்னும் எச்சத்தை (40) அருளி என்பதனால் முடித்துக்கொள்க.