உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           திருநிலத் திறைமை யேயர் பெருமகன்
          பெருங்களி றடக்கிய பெறற்கரும் பேரியாழ்
     45   கல்லா நின்றனள் கனங்குழை யோளென
          எல்லா வேந்தரு மிசையின் விரும்பி
          வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ் சொல்லிக்
          கழிபெரு நன்கலங் களிற்றின்மிசை யுயரித்
          துன்னருங் கோயிலுட் டூதரை விடுத்தர
 
        ( வாசவதத்தையை விரும்பிப் பிறவரசர் மணத்தூது விடுத்தல் )
               43 - 49: இருநிலத்து..........விடுத்தர
 
(பொழிப்புரை) பெரிய நிலத்தை ஆளும் இறைமைத் தன்மையுடைய ஏயர் மரபிற் றோன்றிய உதயணகுமரனுடைய நளகிரியென்னும் பெரிய களிற்றியானையை அடக்கிய சிறப்புடைய பெறற்கரிய பேரியாழினை அவன்பாற் கனவிய குழையையுடைய வாசவதத்தை கற்று மேம்படுகின்றனள் என்னும் செய்தியை யுணர்ந்த பிறநாட்டு வேந்தர்கள், அவளுடைய இசைச் செல்வத்தின் பொருட்டு அவளைப் பெரிதும் விரும்பித் தனித்தனியே பிரச்சோதன மன்னனுக்கு வழிமொழியாகிய சொற்களையும் வணக்கத்தைப் புலப்படுத்தும் சொற்களையும் கூறி மிகப்பெரிய நல்ல அணிகலன்களை யானையின்மேலேற்றி இவற்றோடு பகைவர் கிட்டுதற்கரிய அவனது அரண்மனையின்கண் தத்தம் தூதுவரை உய்ப்ப என்க.
 
(விளக்கம்) ஏயர் பெருமகன் - உதயணன். பெருங்களிறு என்றது நளகிரியை. கனங்குழையோள் - வாசவதத்தை. அழகுச் செல்வத்தோடு இசைச் செல்வமும் உடைமையின் விரும்பி என்றவாறு. வழிமொழிக்கிளவி - மன்னவன் ஆணையைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளமையைத் தெரிவிக்கும் மொழி. உயரி - ஏற்றி.