உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
     50   ஓலையுட் பொருளு முரைத்த மாற்றமும்
          நூலிய லாளரொடு நுண்ணிதிற் கேட்டு
          நன்று மென்னா னன்றென மறாஅன்
          மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
          நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி
     55   ஆவது துணிதுணை யாசையி னிறீஇத்
          தார்கெழு வேந்தன் றமர்களை விடுத்தபின்
 
               ( பிரச்சோதனன் நிலை )
             50 - 56 : ஓலை..........விடுத்தபின்
 
(பொழிப்புரை) வெற்றிமாலை சூடிய பிரச்சோதன மன்னன் அத்தூதுவர் கொணர்ந்த ஓலைகளையும் அவர்கூறிய மொழிகளையும் கற்று வல்ல சான்றோரோடிருந்து நுணுக்கமாகக் கேட்டருளி அவ்வரசர் வேண்டுகோளை நன்றென்று பாராட்டி உடன்படுதலும், நன்றன்று என்று இகழ்ந்து மறுத்தலும் இலனாய் மரத்தின்மேல் ஏறாநின்ற குரங்கு தன்குட்டியினைக் கொண்டுங் கொள்ளாமாலும் இருத்தல் போன்று இருப்பானாகி அவற்றை ஆராய்ந்து நன்மை தீமை தெளியுந்துணையும் அம்மன்னர்களைத் தத்தமக்கு மகட்கொடை வழங்குவன் என்னுமொரு அவாவின்கண் நிறுத்துமியல்புடைய மாற்றங்களைக்கூறி அத்தூதர்களைப் போக்கிய பின்னர் என்க.
 
(விளக்கம்) பொருளை நூலியலாளர் வாசிக்கக் கேட்டு என்க. தாய்க் குரங்கு மரமேறுங்காற் றானே தன் குட்டியைப் பற்றிக் கொள்ளாமலும் அக்குட்டி ஆதரவுடன் பற்றிக் கோடற்கு இடங் கொடுத்தும் ஏறுதல் போன்று மகட்கேட்ட மன்னரைத்தான் பற்றிக் கொள்ளாமலும் அவர் தம்மைப் பற்றிக் கோடற்குரிய மொழிகளைப் பேசியும் இருந்தனன் என்பது கருத்து. 0 ஆவது துணிதுணை - செய்யத்தகுந்த காரியத்தை ஆராய்ந்து தெளியுமளவும். தமர் - தூதர்.