உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           நொதுமற் கிளவி கதுமென வெரீஇப்
     60   புதுமரப் பாவை பொறியற் றாங்கு
          விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி
          இதுமெய் யாயி னின்னுயிர் வேண்டி
          வாழ்வோ ருளரெனிற் சூழ்கதன் வினையென
          ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும்
     65   சாவ துறுதியான் றப்பிய பின்றை
          என்பிற் றீர்க வெந்தைதன் குறையென
          அன்பிற் கொண்ட வரற்றுறு கிளவி
          வளைக்கை நெருக்கி வாய்மிக் கெழுதரக்
          கதிர்முத் தாரங் கழிவன போலச்
     70   சிதர்முத் தாலி சிதறிய கண்ணள்
          மாழ்குபு கலிழு மகள்வயில் றழீஇ
 
               ( வாசவதத்தை வருந்துதல் )
               59 - 71 : நொதுமல்.........மகள்
 
(பொழிப்புரை) தன் கருத்திற்குப் பெரிதும் அயன்மையுடைய அம்மொழிகளைக் கேட்டலும் வாசவதத்தை ஞெரேலென அஞ்சிப் புதியதொரு மரப்பாவை பொறியற்றாற் போன்று மனம் பதைத்தலாலே உண்டான மெய்ந்நடுக்கத்தோடு விம்மிவிம்மி அழுபவளாய், அன்னாய்! மன்னனுடைய இக்கருத்து வாய்மையேயாயின் யான் பாலாவிபோன்ற நுண்ணிய துகிலை என் கழுத்திற் சுருக்கிட்டுத் தூங்கியேனும் சாவது உறுதிகாண். எந்தக் கருத்திற்கு உடன்பட்டு உயிர் வாழ்தலையே விரும்பி வாழும் பிற மகளிர் உளராயின் அவரைக்கொண்டு தன் கருத்தினை நிறைவேற்றிக்கொள்க. யான் இறந்துபட்டபின்னர் எந்தை என் பிணத்தைக் கொண்டு தனது குறையைத் தீர்த்துக் கொள்வானேற் கொள்க! என்று உதயணன்பாற் கொண்ட அன்பு காரணமாக மேற்கொண்ட புலம்பலோடு கூடிய மொழிகள் தனது திருவாயினின்றும் வெளிப்படா நிற்பவும், தனது வளையலணிந்த கைகளை நெரித்து முத்துமாலை அறுந்துழி உகுகின்ற ஒளியுடைய முத்துக்கள் போன்று நீர்த்துளிகளைச் சிந்தா நின்ற கண்ணையுடையளாய் மயங்கிக் கலங்காநின்ற அம்மகளை என்க.
 
(விளக்கம்) நொதுமற் கிளவி - தன் கருத்திற்கு அயலாகிய மொழி என்க. அஃதாவது உன் தந்தை பிற மன்னர் மக்களுள் வைத்துத் தகுதியுடையான் ஒருவனுக்கு மணஞ்செய்து கொடுக்கக் கருதுகின்றார் என்று சாங்கியத்தாய் கூறிய கூற்றென்க. கதுமென: விரைவுக் குறிப்பு. விதுப்பு - பதைப்பு. இது என்றது - எந்தை கருதிய இக் கருத்து என்றவாறு. இன்னுயிர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. ஆவி - பாலாவி. ஆவியன்ன பூந்துகில் என்றார் சிந்தாமணியினும் (67). தப்பிய பின்றை - இறந்த பின்னர். என்பின் - என்பினாலே, என்பு பிணத்திற்கு ஆகுபெயர். உதயணன் பாற்கொண்ட அன்பினால் மேற் கொண்ட அரற்றுறு கிளவி வாய்மிக்கு எழுதா வென்க. ஆரத்தினின்றும் கழிவனவாகிய முத்துப் போல முத்தாலி என்க. முத்தாலி - முத்து முத்தாக வீழும் கண்ணீர்த்துளி.