உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           உலக மாந்த ருள்ளங் கொண்ட
          ஐயக் கிளவி தெய்வந் தேற்றினும்
     110   தூய ளென்னாத் தீதுரை யெய்தி
          வாசவ தத்தையும் வாழ்ந்தன ளென்னும்
          ஓசை நிற்ற லுலகத் தஞ்சுவன்
          எமர்தர வாரா தாயினு மிவணோற்
          றவனுறை யுலகத் தழித்துப்பிறந் தாயினும்
     115   எய்துதல் வலித்தனென் செய்வது கேளெனத்
          தெய்வ மாதர் திட்பங் கூற
 
                ( இதுவுமது )
           108 - 116 : உலக..........கூற
 
(பொழிப்புரை) அன்னாய்! கேள். தெய்வமே கண்கூடாக எதிர் வந்து தெளிவித்தாலும் தெளிந்து இவள் தூயள் என்று ஒப்புக் கொள்ளாதபடி இவ்வுலக மக்கள் தம்முள்ளத்தே கொண்டுள்ள ஐயங்காரணமாகப் பிறக்கும் பழிச்சொல்லாகிய தீய மொழியை ஏற்றுக்கொண்டு வாசவதத்தை (மற்றொரு மன்னன் மகனோடு) வாழ்ந்தனள் என்று கூறும் பெரும் பழிச்சொல் இவ்வுலகத்தே அழியாமல் நின்று நிலவுதலை யான் பெரிதும் அஞ்சுகின்றேன் காண்! நன்று, இவ்வாறு யான் பழியேற்றற்குக் காரணமான உதயண மன்னனோடு கூடி யான் வாழும் வாழ்க்கை இம்மையிலே என் தந்தை முதலியோர் மனமுவந்து வழங்குமாற்றால் எனக்கு வாராதாயினும் ஒழிக! இவ்விடத்தே நோன்பு செய்து இவ்வுடலை அழித்து மீண்டும் பிறப்பேன்; பிறந்துழி அவ்விடத்தே அவ்வாழ்க்கையை எய்துதல் ஒருதலை யாகலின் அங்ஙனம் செய்தலையே துணிந்தேன் காண்! இனி யான் செய்ய வேண்டியது இஃதொன்றுமே என்று வாசவதத்தை தன் உள்ளத்துறுதிப்பாட்டைக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) ஐயக்கிளவியாகிய தீதுரையென்க. ஓசை: ஆகுபெயர் - பழிச்சொல். 'எமர்தரவாரா தாயினும் இவண் நோற்று அவண் உறையுலகத்து அழித்துப் பிறந்தாயினும் எய்துதல் வலித்தனென்' என்னுமிக்கருத்தினை, 'ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு' எனவரும் (குறிஞ்சிப்பாட்டு 23 - 4). தலைவி கூற்றினுங் காண்க. இவ்வுழுவலன்பின் திறத்தினை,

    'இம்மை மாறி மறுமை யாயினும்    நீயாகியர் என் கணவனை    யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே' எனவரும் குறுந்தொகையானும் (49) உணர்க. null