உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           பைந்தொடி யாயமொடு பன்னோடி பகர்ந்து
     125   கங்குல் யாமத்தங் கண்படுத் திலையாற்
          கல்விச் சேவகங் கடவோன் வருந்துணைப்
          பல்பூங் கோதாய் பள்ளிகொண் டருளெனப்
          பூமென் சேக்கையுட் புனையிழைப் புகீஇ
          யான்வரு மாத்திரை யாரையும் விலக்கிக்
     130   காஞ்சன மாலாய் காவல் போற்றெனத
 
              ( சாங்கியத்தாய் கூற்று )  
      124 - 130 : பைந்தொடி..........போற்றெனகூறி
 
(பொழிப்புரை) பலவாகிய மலர்மாலையணிந்த வாசவதத்தாய்! நீதான் கழிந்த இரவின்கண் பசிய தொடியணிந்த நின் தோழியர் குழாத்தோடு கூடிப் பலவாகிய நொடியும் பிசியும் பேசி நள்ளிரவினும் கண் படை கொண்டிலையல்லையோ! ஆதலால் கல்வியால் வரும் பெருமிதத்தைச் செலுத்துபவனாகிய நின் ஆசான் உதயணன் ஈண்டுக் கற்பிக்க வருந்துணையும் நீ பாயல் கொண்டு துயில்வாயாக! என்று அறிவுறுத்தி மலராலாய மெல்லிய படுக்கையின்கண் வாசவதத்தையைக் கிடத்திப் பின்னர்க் காஞ்சனமாலையை நோக்கித் தோழீ! யான் இங்கு மீண்டு வருமளவும் இங்கு வருவோர் யாவரேயாயினும் வாராமற்றடுத்துக் காவல் செய்வாயாக! என்று பணித்து என்க.
 
(விளக்கம்) நொடி பகர்ந்தமையால் யாமத்துங் கண்படுத்திலை என்றவாறு. கல்விச் சேவகம் - கல்வியால் வரும் பெருமிதம். புகீஇ - புகுத்து. காஞ்சனமாலை - வாசவதத்தையின் உசாத்துணைத் தோழி.