உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           தொகுவேன் முற்றஞ் சிவிகையிற் போந்து
          மயிலா டிடைகழி மாடத் தொருசிறைப்
          பயில்பூங் கொம்பர்ப் பந்தர்மு னிழிந்து
          கிளரிழை கற்குங் கேள்விப் பொழுதெனத்
     135   தளரிய லாயமொடு தாய்முத லிசைப்பக்
          கீத சாலை வேதிகை காக்கும்
          கோல்கொள் சுற்றமொடு குமரன் புகுதர
          இடுமணன் முற்றத் திவ்வழி வருகெனக்
          கொடிமுதிர் குருகின் கொம்புதலைக் கொண்ட
     140   உதிர்பூம் புன்கி னொருசிறை யிரீஇ
 
             ( சாங்கியத்தாய் உதயணனைக் காணுதல் )
               131 - 140 : தொகுவேன்..........இரீஇ
 
(பொழிப்புரை) வேலேந்திய மறவர் குழுமிய அரண்மனை முற்றத்தின்கண் உதயணன் சிவிகையூர்ந்து வந்து மயில்கள் ஆடாநின்ற இடைகழியினுடைய கன்னி மாடத்தின் ஒரு பக்கத்தில் மலர்க் கொம்புகள் அசையாநின்ற பந்தரின் முன்னர்ச் சிவிகையினின்றும் இழிந்துழி ஆண்டுச் சென்ற தளர்ந்த நடையினையுடைய தோழியரும் சாங்கியத்தாயும் அவனைக்கண்டு வணங்கிப் பெருமானே! இஃது ஒளிவிடும் அணிகலன் அணிந்த வாசவதத்தை யாழ் கற்றற்கும் கேட்டற்கும் உரிய பொழுதாகும் என்று முன்னர் அறிவியாநிற்றலாலே இசைமன்றத்தின் மேடையைப் பாதுகாக்கும் பிரப்பங்கோ லேந்திய மறவரோடு உதயணன் புகுதாநிற்ப வழியிடைக் கிடந்த மணல் பரப்பப்பட்ட முற்றத்தின் கண்ணே சாங்கியத்தாய் ''பெருமானே! இந்த வழியே வருக'' என்று மற்றொரு வழிகாட்டி வரவேற்று அழைத்துப்போய் முதிர்ந்த குருக்கத்திக் கொடிபடர்ந்த தலையினையுடைய உதிரா நின்ற மலர்களையுடைய புன்கமரத்தின் கீழ் ஒரு புறத்தே அமர்வித்து என்க.
 
(விளக்கம்) தொகுவேல் - தொக்கவேற்படை. இடைகழி - விடு நிலம். கிளரிழை - வாசவதத்தை; அன்மொழித் தொகை. கேள்விப் பொழுது - கேட்டற்கென வரையறை செய்த காலம். தாய் - சாங்கியத்தாய். குமரன் - உதயணகுமரன். குருகு - குருக்கத்தி. இரீஇ - இருப்பித்து.